2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்முனையில் கோழியிறைச்சிக்கு நிர்ணய விலை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் நிர்ணய விலையில் புரொய்லர் கோழியிறைச்சியை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல், மாநகர மேயர் செயலகத்தில், மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று (03) நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியானது வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் சில வியாபாரிகளும் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கோழி இறைச்சி வியாபாரிகளிடையே முரண்பாடுகளும் தோன்றுகின்றன. 

இவ்விடயம் மேயரின் கவனத்துக்குக்கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆலோசனை, அறிவுறுத்தல்களின் பிரகாரம் புரொய்லர் கோழியிறைச்சிக்கு நிர்ணய விலையைத் தீர்மானித்து, நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் இவ்விலையைத் தீர்மானிப்பதற்காக கோழி விற்பனை வர்த்தகர்களிடையே ஐவர் கொண்ட  விலை நிர்ணயக் குழுவொன்றும் தெரிவுசெய்யப்பட்டது. 

இக்குழுவினால் நாளாந்தம் தீர்மானிக்கப்படுகின்ற நிர்ணய விலை, மாநகர சபை ஊடாக அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்துவது எனவும் அவ்விலையிலேயே அனைவரும் புரொய்லர் கோழியிறைச்சியை விற்பனை செய்வது எனவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் இதனை அமுல்படுத்துவது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .