2025 மே 19, திங்கட்கிழமை

கல்முனையின் நகர மண்டபம் மக்களின் பாவனைக்கு விடப்படும்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

'கடந்த இரண்டு வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்றின் பாவனையில் இருந்து வருகின்ற கல்முனை நகர மண்டபத்தின் குத்தகை ஒப்பந்தம், இந்த வருடம் டிசெம்பர் மாதத்துடன் ரத்து செய்யப்பட்டு, பொது மக்களின் பாவனைக்காக விடப்படும்' என்று கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.  

கல்முனையில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில், கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் (முனுஆஊ) பிரதிநிதிகள் நேற்று சனிக்கிழமை (06) மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, தனியார் நிறுவனத்தின் பாவனைக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ள இந்நகர மண்டபத்தை மீளப்பெற்று, அதனை பொது மக்கள் பாவனைக்காக விடுவிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கல்முனையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் பற்றி ஆணையாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அக்கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டது.

அனைத்து வீதிகளிலும் குப்பைக் கழிவுகள் வாரம் ஒரு முறை கிரமமாக அகற்றப்படுவதுடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சுற்று வட்டாரத்தில் குவிக்கப்படும் குப்பைகள் ஒரு வாரத்தில் இரண்டு நாட்களாவது அகற்றப்பட வேண்டும் எனவும் அவ்விடத்தில் குப்பைக் கொள்கலன் ஒன்று நிறுவப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் மழை காலத்துக்கு முன்னர் வடிகான்கள் யாவும் துப்பரவு செய்யப்படல், சேதமடைந்துள்ள மூடிகளுக்கு பதிலாக புதிய மூடிகள் இடப்படல், மாநகர சபையினால் பராமரிக்கப்படும் வீதிகள் புனரமைக்கப்படல், நகர மண்டப வீதி, அலியார் வீதி, கடற்கரை வீதி போன்றவற்றிலுள்ள பள்ளம், படுகுழிகள் சீர்செய்யப்படல், கல்முனை பொது நூலகத்துக்கு புதிய நூல்கள் மற்றும் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படல் என்பதுடன் அந்நூலகம் மாலை ஒன்பது மணி வரை திறந்திருக்க வேண்டும் என்றும் அதற்கு நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட வேண்டும் மற்றும் நகர நெடுஞ்சாலையின் நடுவே பூ மரங்கள் நடப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X