எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக, 2008ஆம் ஆண்டு, காணி இழந்து, இதுவரைக்கும் நட்டஈடு வழங்கப்படாத காணி உரிமையாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்திப் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.
ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பால், ஒலுவில் பிரதேச மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், காணி தொடர்பான கலந்துரையாடல், ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் காரியாலயத்தில், நேற்று (24) மாலை நடைபெற்றது.
ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையின் ஏற்பாட்டில், பிரதித் தலைவர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போதே, பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில், துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணியுரிமையாளர்களுக்கு, அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் விலை மதிப்பீட்டுக்கமைய, நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
மேலும், துறைமுக மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்திலுள்ள காணியை, அங்கு வாழும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்குவதற்கு, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடனும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருடனும் கலந்துரையாடி, இதற்கான தீர்வு விரைவில் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மணலால் மூடப்பட்டுள்ள துறைமுக நுழைவாயிலுள்ள மணலை, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தவிசாளர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் பேசி, அதற்கான தீர்வும் வழங்கப்படுமென்றும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைனைச்சேனை பிரதேச தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். ஹம்ஸா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026