Suganthini Ratnam / 2016 மார்ச் 17 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை, கல்முனைக் கல்வி வலயத்துக்குட்பட்ட காரைதீவுக் கோட்டத்திலுள்ள ஒரேயொரு 1 ஏபி பாடசாலையான காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் தரம் -06 முதல் தரம் -11 வரையுள்ள வகுப்புகளுக்கு கடந்த எட்டு மாதங்களாக கணித பாடத்துக்கு ஆசிரியர்கள் இன்மையால்; மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின், வீதியில் இறங்கிப் போராடுவோமெனவும் பெற்றோர்கள் கூறினர்.
தரம் -06 முதல் தரம் -11 வரையுள்ள வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கணிதபாட ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், இந்தப் பாடசாலையில் ஏற்கெனவே இருந்த இரண்டு கணிதபாட ஆசிரியர்களில் ஒருவர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஓய்வில் சென்றுள்ளார். மற்றைய ஆசிரியர் பதவி உயர்வு பெற்றுக்கொண்டு இந்த வருடத்தின் ஜனவரி மாதம் சென்றுள்ளார். இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் பதிலாக இதுவரையில் எவரும் நியமிக்கப்படாமையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் மேற்படி பாடசாலை அதிபரிடம்; கேட்டபோது, 'மேற்படி இரண்டு ஆசிரியர்களினதும் வெற்றிடங்களை நிரப்புமாறு எழுத்து மூலமாக கல்வி அலுவலகத்திடம் நாம் கோரியுள்ளோம். ஆனால், இதுவரையில் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.
மேலும், இந்தப் பாடசாலைக்கு ஒரு ஆங்கிலப் பாட ஆசிரியரும் தகவல் தொழில்நுட்பப் பாட ஆசிரியரும் விவசாயப் பாட ஆசிரியரும் தேவையாகவுள்ளனர். இந்த வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டுமென்று நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பரதன் கந்தசாமியிடம் கேட்டபோது, 'அங்குள்ள ஆசிரியர் தட்டுப்பாட்டு நிலைமையை நான் அறிவேன். இது பற்றி உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .