2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பயிற்சி நிலையங்கள் தொடர்ந்து அதே இடங்களில் இயங்கும்

Niroshini   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அரசாங்க தனியார் பயிற்சி நிலையங்களை தொடர்ந்தும் இயங்க வைப்பதற்கு கிழக்கு மாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

மேலும், செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற மாகாண சபை அமர்வின் போதே இது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அரசாங்க பயிற்சி நிலையங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை , அம்பாறை போன்ற பிரதேசங்களிலும் மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் தனியார் பயிற்சி நிலையங்களும் இயங்கி வந்தன.

வெளிநாடு செல்லும் திறனற்றவர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு பயிற்சிகள், பணியகப்பதிவு, நலனோம்பல், வெளிநாட்டில் வேலை செய்யும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள், சித்தியடைந்தவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவு, வெளிநாட்டில் காயம் அடைந்தவர்களுக்கும் மரணித்தவர்களுக்குமான காப்புறுதி, நஷ்டஈடு போன்றவற்றை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளும் எமது பிரதேசத்தில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

இதனால் கொழும்பு நகர் சென்று வரும் வீண் சிரமங்கள் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென சென்ற 20.01.2016ஆம் திகதியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து அரசாங்க, தனியார் பயிற்சி நிலையங்களையும் மூடிவிட்டு இனிமேல் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கள் பெற்று செல்பவர்களுக்கான பயிற்சிகளை தங்கல்ல, மத்துகம, கண்டி, பன்னிப்பிட்டி, இரத்தினபுரி, மீகொட போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரசாங்க பயிற்சி நிலையங்களையும் அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் பயிற்சி நிலையங்களையும் தொடர்ந்தும் அப்பிரதேசங்களிலேயே இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மாகாண சபையில் தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, சபையில் இப்பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X