2025 மே 14, புதன்கிழமை

புகைப்பட நிலையம் தீக்கிரை

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புகைப்பட நிலையமொன்று, இன்று (01) காலை தீக்கிரையாகியுள்ளது. பிரதேச செயலகத்துக்கு அருகில் சாகாம வீதியில் அமைந்துள்ள புகைப்பட நிலையமே, இவ்வாறு தீயில் முற்றாக அழிந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியின் பயனாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், நவீன வசதிகளுடன் புதிதாகத் திறக்கப்பட்ட இந்த புகைப்பட நிலையத்தில் இருந்த அனைத்துப் பொருள்களும் தீக்கிரையாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த புகைப்பட நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், இன்றையதினம் நிலையத்தை திறந்து கடமையை மேற்கொண்டதன் பின்னர் வெளிப்படப்பிடிப்பு ஒன்றுக்காக மீண்டும் நிலையத்தை மூடிவிட்டு, வெளியே சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் தீயில் கருகும் வாசத்தை அருகில் இருந்த கடை உரிமையாளரும் சிலரும் உணர்ந்து, புகைப்பட நிலையத்தின் முன்கதவை திறந்த நிலையில், புகைப்பட நிலையம் உள்ளே முற்றாக எரிந்துள்ளது.

உடன் மின்சார இணைப்பைத் துண்டித்த அயலவர்கள், நீரை ஊற்றி புகைப்பட நிலையத்தை பாதுகாக்க முற்பட்டதுடன், உரிமையாளருக்கும் அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.

தீப்பரவலுக்கு மின்னொழுக்கு காரணமாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .