2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘வரிகளை அறவிடுவதன் மூலமே சேவைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும்’

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

வரிகளை அறவிடுவதன் மூலமே கல்முனை மாநகர சபையின் நிதி நிலைமையை சீர்படுத்தி, பொது மக்களுக்கான சேவைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்றும் இதனைக் கருத்தில் கொண்டே அடுத்த ஆண்டில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற கல்முனை மாநகர சபையின் விசேட அமர்வில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்துரைக்கையில், இது எனது தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தின் முதலாவது வரவு- செலவுத் திட்டமாக அமைந்துள்ளது. இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டே இவ்வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அத்தோடு, 2018ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட சபை வருமானமானது சுமார் 89 மில்லியன் ரூபாவாக இருந்தது. அது 2019 ஆம் ஆண்டுக்கு 311 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வருமான மூலங்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பெறப்படுகின்ற வருமானங்கள் அனைத்தும் மக்கள் நலனோம்புத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுமென்றும், அவ்வாறே எதிர்வருகின்ற நிதியாண்டில் கல்முனை மாநகர சபைக்கு தொடர்ச்சியாக சவாலாக இருக்கின்ற திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவம், வீதி வடிகான் பராமரிப்பு மற்றும் தெருவிளக்கு ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தி, அவற்றை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான வரிகளை அறவிடுவதன் மூலமே மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என்பதை வலியுறுத்துகவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .