ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான்
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்ட இஸ்மாயில்புர பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவர், ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளாரென, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜயலத் தெரிவித்தார்.
இரு குழுக்கள் மது அருந்திக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சர்ச்சையையடுத்து சந்தேக நபர், சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் அமைந்துள்ள தனது வீட்டுக்கருகில் திங்கட்கிழமை (20) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், தலைமறைவாகியிருந்த சந்தேக நபரை நேற்று (21) மாலை கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
சம்மாந்துறை செந்நெல்புரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மேற்படி சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி, ரவைகளையும், பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேகநபர் தீர்த்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜயலத் மேலும் தெரிவித்தார்.