2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'ஆக்கிரமிக்கப்பட்ட, இழந்த காணிகள் உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா    

அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றும் இழந்த காணிகளை உரிய காணி உரிமையாளர்களுக்கு சமத்துவமான முறையில் வழங்குவதற்கான நடவடிக்கையை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் தலைவர் பி.கைறுடீன் தெரிவித்தார்.

அம்பாறை மாட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களுக்கு மீள வழங்கும் நடவடிக்கை தொடர்பாக 'எமது நிலம் எமது வாழ்வு' எனும் தொனிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை ஒஸ்ரா மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'குறித்த காணிப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு குறுகிய காலத்துக்குள்; உண்மையைக் கண்டறிந்து அதற்கான நீதி தீர்த்தல், பரிகாரம் வழங்குதல் மாத்திரமில்லாது இவ்வாறு மீளவும் நிகழாமைக்கான நடவடிக்கை, கொள்கை மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செய்து அதனைப் பாராபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

விவசாயத்துக்கு வழங்கப்பட்டு பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயக் காணிகளை வனப்பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு, இராணுவ முகாம், புனித பூமி, ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கு என்று எடுக்கப்பட்ட காணிகளை உரிய விவசாயிகளுக்கு மீள வழங்கப்பட வேண்டும்.

எந்த அடிப்படையிலும் காணிகளை நியாயமற்ற முறையில், அடாத்தாக அபகரிப்பதானது குற்றவியல் சட்டத்துக்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டியுள்ளதுடன், அது அனைத்தும் குடிமக்களுக்கும்; பாராபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக சிறுபான்மை சமூகங்களினதும் காணி உரிமைகளின் பாதுகாப்பானது நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்குட்படுத்தப்பட்டு நியாயமான முறையில் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும்.

தற்காலத்துக்கு பொருத்தமற்ற காணிச்சட்டங்கள், அரச காணிகளைப் பகிர்ந்தளிக்கும் விதிகள் நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்;கும் சம உரிமையை வழங்கவும் பொருத்தமானதாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

காணிப் பிரச்சினைகளுக்கு துரிதமான நீதி வழங்கும் நீதிப் பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
குடியிருப்பு, விவசாயக் காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு இதற்கு முன் பகிர்ந்தளிக்கப்படாத அரச காணிகள் பாராபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது சர்வதேச நியமங்களின் படி அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பொன்னன்வெளி கண்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான 600 ஏக்கர் காணியும், ஒலுவில் அஷ்ரப் நகர் 69 விவசாயக் குடும்பங்களுக்கான காணிகளும் அம்பலம் ஓயா பிரதேசத்தில் 750 ஏக்கர் விவசாயக் காணிகளும் ஆலையடிவேம்பு பாவாபுரத்தில் 96 ஏக்கர் காணிகளும் பொத்துவில் வேகாமத்தில் 450 ஏக்கர் காணிகளும் கிரான்கோவை பாலையடி வட்டை 503 ஏக்கர் நெற்காணிகளும் கிரான் கோமாரியில் 177 ஏக்கர் காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பாணாமை, தமண, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் பெறும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த விவசாயிகள் பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ளனர்.

இந் நல்லாட்சி அரசாங்கம் குறித்த காணிகளை மீட்டு உரியவர்களுக்கு வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். இது தொடர்பான மகஜர்கள் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X