2025 மே 03, சனிக்கிழமை

'இனப் பிரச்சினையைத் தீர்க்கவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 30 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையைத் தீர்க்கவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள்  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு தலைமைத்துவ அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு -2017, சாய்ந்தமருது லீ மெடிரியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'நாம் சற்று அசந்தால், நல்லாட்சியும் எமது தலையில் மிளகாய் அரைத்துவிடும். மேலும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைகீழாக நின்றாலும் அல்லது என்ன செய்தாலும் கூட, 2020ஆம் ஆண்டுவரை அசைக்கவும் வீழ்த்தவும் முடியாது.

நாங்கள் அமைத்த இந்த நல்லாட்சி அரசாங்கத்தில்  கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்குத் தேவையில்லை. இவர் என்ன செய்தாலும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது' என்றார்.

'மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஆட்சிக்காலத்தைப் போன்று, இந்த அரசாங்கத்தில் மதவாதம், இனவாதம், மொழிவாதம், அரச பயங்கரவாதம் என்பன கிடையாது.

இந்த நாட்டில் தேசிய சகவாழ்வு என்ற பாரிய பொறுப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சர்கள் பாலங்களை மற்றும் கட்டடங்களைக்  கட்டுகின்றார்கள், வீதிகளை அமைக்கின்றார்கள்.  ஆனால், நான் நாட்டு மக்களின் சகவாழ்வின் ஊடாக மனங்களில் கட்டுகின்றேன்.

சிறுபான்மையின மக்கள் ஒன்றைத் தெளிவாகப்  புரிந்துகொள்ள வேண்டும். சகவாழ்வு என்ற பெயரில் எங்களின் இனத்தை, மதத்தை, கலாசாரத்தை விலைபேசி விற்க முடியாது. இந்த நாட்டில் சகவாழ்வு, ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால், தேசிய நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.

சகவாழ்வு என்றால் எல்லா இன, மத, மொழிகளுக்கும் அங்கிகாரம், சமத்துவம்  இருக்க வேண்டும். இவை இருந்தாலே சகவாழ்வு ஏற்படும்.

சிறுபான்மையினக் கட்சிகளுக்கு இடையில்  முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனம், மதம், மொழி என்று வரும்போது, நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அப்போதே அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும்.

எனவே இனம்;, மொழி, மதம் ஆகியவற்றுக்கிடையில் சமத்துவம் இருந்தாலே சகவாழ்வு மலரும் என்பதுடன், சமத்துவம் இல்லாதவிடத்தில் சகவாழ்வு பற்றிப்; பேசுவதால் பயன் இல்லை. உண்மையான சகவாழ்வு என்றால் அங்கு  இனம், மொழி, மதம் ஆகியவற்;றின் தனித்துவம் அங்கிகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X