2025 மே 21, புதன்கிழமை

'உண்மையைக் கண்டறிய நிபுணத்துவக்குழு தென்னாபிரிக்கா செல்லவுள்ளது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,கனகராசா சரவணன்

'காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறிவதற்காக செயலணியொன்றை அமைத்து பொறிமுறையையும் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்காக எமது நிபுணத்துவக் குழுவொன்று தென்னாபிரிக்காவுக்குச் சென்று கலந்துரையாடவுள்ளது. எதிர்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்தி செயற்படுத்துவதற்கும் உள்ளோம்' என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் அதற்கான தீர்வு யோசனைகளைப் பெற்று நட்டஈடு மற்றும் உதவிகளை செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
காணாமல் போனோர் குடும்பங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த மாபெரும் மக்கள் பேரணியும் கூட்டமும் அம்பாறை, அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் புதன்கிழமை (30) நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்த நாடு தொடர்பாக உலக நாடுகளுக்கு ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கை இருந்தது. பிரித்தானியாவின் காலணித்துவ காலத்தின்போது தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைவர்கள் இன, மத வேறுபாடுகள் காணாது ஒற்றுமையாகச் செயற்பட்டதன் காரணமாக இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது.

சுதந்திரத்தின் பின்னர் இன, மத, கட்சி, மற்றும் மொழி ரீதியாக பிரிந்து சென்ற காரணத்தால் எமது நாடு  பின்னோக்கிய நகர்வுக்குச் செல்வதற்குக் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக இளைஞர்கள் தெற்கிலும் வடக்கிலும் 26 வருட போராட்டத்தில் ஈடுபட்டதை நாம் கண்டுள்ளோம்' என்றார்.

'இந்த நாட்டில் மாற்றமொன்றைக்; கொண்டுவந்து அழிவுப் பாதையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுத்து முன்னோக்கிச் செல்லும் பணியில் கடந்த வருடம் ஜனவரி 08ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனையும்; கொண்டுவந்து புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்துள்ளது' என்றார்.  

'இந்த ஆட்சியில் நான் ஜெனீவா சென்றிருந்தபோது கடந்தகால ஆட்கடத்தல், படுகொலைகள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையினூடாக ஒரு குழு அமைத்து செயற்படுவதற்குத் தெரிவித்திருந்தேன். இதன்போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பு, ஆலோசனைகள் தேவைப்டின் அதனையும் பெறுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம் எனக் கூறினேன். இதன் மூலம் ஒரு உடன்பாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி மனித உரிமை தினத்தில் சர்வதேச காணாமல் போனவதற்கு எதிரான சமவாயத்தில் கையொப்பமிட்டுள்ளோம். இனிமேல் இந்த நாட்டில் கடத்தல், காணாமல் போதல் செயற்பாடுகள் இருக்கக் கூடாது என்பதற்கான் ஒரு வரலாற்றைப் படைப்பதற்காக நாங்கள் முயற்சித்திருக்கின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .