2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

“கல்வி அமைச்சு அநீதியிழைத்துவிட்டது”

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கல்வி சாரா உத்தியோகத்தர்களாக 15 வருடங்களாக சேவையாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோரை கல்வி அமைச்சு பொது நிர்வாக அமைச்சுக்கு மாற்றி அநீதியிழைத்துள்ளது.எனவே,அரசாங்கம் இதனை இரத்து செய்து இறுதியாக கடமையாற்றிய பாடசாலைகளிலேயே மீளக் கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 1999ஆம்,2005ஆம்,2008ஆம் ஆண்டுகளில்  அரச துறைகளில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் கல்விசாரா ஊழியர்களாக  பாடசாலை முகாமைத்துவ உதவியாளர்கள் திட்டமிடல், நிதி மற்றும் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் பதவிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு சேவையாற்றி வந்தனர்.

இவ்வாறு சேவையாற்றி வந்தவர்களை பொது நிர்வாக அமைச்சின் கீழ் வேறு திணைக்களங்களுக்கு  மாற்றப்பட்டதன் மூலம் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வருடம் அரசாங்கத்தினால் பட்டதாரி ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் திணைக்களங்களிலும்  அமைச்சுக்களிலும் கடமையாற்றிய  இந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விருப்புரிமை கடிதம் பெற்று அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பெயர் மாற்றம் செய்து அவர்கள் கடமையாற்றும் திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் தொடர்ந்து கடமையாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண பாடசாலைகளில் கல்வி சாரா ஊழியர்களாக விசேடமாக அனுமதிக்கப்பட்டு கடமையாற்றி வந்த எங்களிடமிருந்து  கல்வி அமைச்சு விருப்புரிமைக் கடிதம் பெற்று 2014ஆம் ஆண்டு மாகாண பொது நிர்வாக அமைச்சுக்கு மாற்றியுள்ளது.

பாடசாலைகளில் கடமையாற்றிய எமது நியமனக் கடிதங்களின் படி எங்களுக்கு வழங்கப்பட்ட நியமன பாடசாலைக்கென விசேடமாக அனுமதிக்கப்பட்ட பதவியாகும். இதனால்  பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெறுவதற்கோ அல்லது செயற்படுவதற்கோ நாங்கள் உரித்துடையவரல்லர் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாங்கள் ஓய்வு பெறும் வரையும் பாடசாலைகளில் கடமையாற்ற உரித்துடையவர்கள் மட்டுமன்றி எங்களை ஒரு பாடசாலையில் இருந்து இன்னொரு பாடசாலைக்கு மட்டும் தான் இடமாற்றம் செய்ய முடியும்.ஆனால் எமது நியமனக் கடிதத்தின் நிபந்தனைக்கு முரணாகவும் எங்களது விருப்பத்துக்கு மாறாகவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் எங்களை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றியுள்ளன.

இதனால் நாங்கள் உள,தொழில்,சமூக ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம்.அதுமட்டுமன்றி பாடசாலைகளில் நிர்வாக செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக  நாட்டின் எல்லா மாகாண, தேசிய பாடசாலைகளிலும் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் சில மாகாணப் பாடசாலைகளில் பழைய பதவிகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.

எனவே கல்வி அமைச்சர் பாடசாலைகளிலிருந்து வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் இடமாற்றத்தினை இரத்து செய்து இறுதியாக கடமையாற்றிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக கடமையாற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட கல்வி சாரா உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X