2025 மே 19, திங்கட்கிழமை

'சுகாதார அமைச்சுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு, பைசல் இஸ்மாயில்

கடந்த காலங்களை விட இவ்வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் வெள்ளிக் கிழமை (26) இரவு தெரிவித்தார்.

செப்டெம்பர் 01ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள நடமாடும் சேவை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியாலளர் மாநாடு நேற்று(26) அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வருடங்களை விட இவ்வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு 1,200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியினைக் கொண்டு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களுக்கும் சுகதார துறை சார்ந்த அபிவிருத்திக்காக எமது அமைச்சு ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

 இதேவேளை, இம் மூன்று மாவட்டங்களிலும் இன, மத, பிரதேச, கட்சி வேறுபாடுகள் பார்க்கப்படாது மிகவும் அவசியம் கருதியும் மக்கள் தேவை அறிந்தும் எமது சுகாதார துறைசார்ந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் 51 மருந்தாளர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்றன. அதனை விரைவில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இதுவரை தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

இவற்றுக்கு தீர்வு வழங்கும் வகையில் மாவட்டதிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் ஒன்றிணைத்து 15 திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மாபெரும் நடமாடும் சேவையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நகர திட்டமிடல், நீர் வழங்கள் அமைச்சும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலகமும் இணைந்து நடத்தவுள்ளன.

இந்நடமாடும் சேவையில் காணிப்பிரச்சனைகள், மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள், சுத்தமான குடிநீர் தொடர்பான பிரச்சினைகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு தொடர்பான பிரச்சினைகள், விவசாயம், மீன்பிடி மற்றும் அடையாள அட்டை போன்ற போன்ற பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறவுள்ளன.

மேலும், மக்களுக்கு உச்சளவிலான சேவையை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நடமாடும் சேவைக்கான விசேட போக்குவரத்துச் சேவை வழங்கப்படவுள்ளதுடன் மாகாண, மத்திய சுகாதார அமைச்சின் வைத்திய முகாம் சேவை, பற்சிகிச்சை சேவை, தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகள், வைத்தியசாலைகளுக்கான வைத்திய உபகரணங்கள் வழங்கி வைத்தல் என்பன இடம்பெறவுள்ளன.

இறுதி நிகழ்வாக 400 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதுடன், வலுவிழந்தோர் 50பேருக்கு சக்கர கதிரை, மலசல கூட வசதியற்ற 30 பேருக்கு மானிய முறையில் தலா 10,000 ரூபாவுக்கான காசோலைகள், குறைந்த வருமானம் பெறுவோர் 70 பேருக்கு சுயதொழில் வசதி மற்றும் 50 பேருக்கு மூக்குக் கண்ணாடி வழங்குதல், மதஸ்தலங்களுக்கான நீர்தாங்கிகள் வழங்கி வைத்தில் என்பனவும் இடம்பெறவுள்ளன” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X