2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடுவதே தென்பகுதித் தலைமைகளுக்கு கொடுக்கும் மரண அடி'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு ஒன்றுபட்டு தேசியத்துடன் பேசுவதே தென்பகுதித் தலைமைகளுக்கு கொடுக்கும் முதலாவது மரண அடியென கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று டி.எப்.சி. ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள்  அனைவரும் முதலில் ஒரே மேசையில் கூடி எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வு கண்டு  நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டும்' என்றார்.

'மேலும், இந்த நாட்டில் ஆட்சிக்கு வரும் பெருபான்மையினத் தலைமைகள் தமிழருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது, அதே கட்சியில் இருக்கின்ற இரண்டாம் தலைமைகள் முஸ்லிம்களுடன் பேசுகிறது.
தமிழருக்கு தீர்வு வழங்கப்படவுள்ளது. நீங்கள் ஏன் மறுப்புத் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கின்றீர்கள்? நீங்களும் கேளுங்களெனக் கூறி தமிழரையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காது, எம்மீது பழி போட்டு அதில் அவர்கள் குளிர் காய்கின்றனர். இதை நாம் புரிந்துகொண்டு இரு இனங்களும் தனித்தனியாகச் சென்று பேசாது ஒன்றுபட்டுச் செயற்படும்போது, தென்பகுதித் தலைவர்களின் சூழ்ச்சியிலிருந்து நாம் தப்பமுடியும். இந்த ஒற்றுமையினால் எமது பலத்தை நிரூபித்துக்  காட்டுவதன் மூலம் தென்பகுதித் தலைமைகளுக்கு மரண அடி கொடுக்கவேண்டும்.

தமிழருக்கும் முஸ்லிமுக்கும் இடையிலுள்ள வேறுபாடு நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தல்ல. இந்நாட்டில் யுத்தம் இடம்பெற முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்தனர். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பிரச்சினைகள் கூர்மைப்படுத்தப்பட்டு, இவ்விரு இனங்களும் துரதிஷ்;டவசமாக நம்பிகையற்ற நிலையிலுள்ளனர். இதை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் இனங்கள் மீண்டும் சகோதரராக வாழவேண்டும்.
எனவே, இதற்கான நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஒரே மேசைக்கு தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் வரவேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X