2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'பக்கச்சார்பின்மையும் சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

நாட்டுக்காக தான் பக்கச்சார்பு அற்ற மத்திம கொள்கையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பக்கச்சார்பு இன்மையையும் சுயாதீனத்துவத்தையும் பேண வேண்டும் எனவும் கூறினார்.

அதற்குப் புறம்பாக செயற்படுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படக்கூடாது எனவும் அவர் கூறினார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்; நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக ஜெய்க்கா நிதி உதவியுடன் 1,000 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகாஓயா நீர்வழங்கல்; திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் மகாஓயா வலயத்திலுள்ள 09 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 14,000 பேர் பயன் அடையவுள்ளனர்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான வளங்கள், தொழில்நுட்பம், இயந்திரங்களைப் போன்றே நாட்டு மக்கள் மத்தியிலும்; சுதந்திரமான சமூகத்தை உறுதிசெய்வதற்கு கடந்த 17 மாத காலப்பகுதியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

2020ஆம் ஆண்டுவரை அரசாங்கத்தை விழுத்துவதற்கு எவராலும் முடியாது என்பதுடன், அதன் எதிர்காலப் பயணம் 2020ஆம் ஆண்டிலேயே தீர்மானிக்கப்படும்.

இன்று எவருக்கும்; அரசாங்கத்தையும் நாட்டின் தலைவரையும் விமர்சிப்பதற்கு உரிமை கிடைத்துள்ளதாகவும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பிருந்த வெள்ளை வான் கலாசாரத்துக்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது' என்றார்.   

'நாட்டின் சனத்தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முகங்கொடுத்துள்ள சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்ளும் விடயம் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றது.
எதிர்வரும் 03 வருடங்களில்; இலங்கையில் குடிநீர்ப் பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். மேலும், திகாமடுல்ல மக்களின் குடிநீர்த் திட்டத்துக்காக மட்டும் இதுவைரயில் சுமார் 20ஆயிரம் மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது' எனவும் அவர் கூறினார்.  

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் 3500 மில்லின் ரூபா நிதிப்பங்களிப்பில் ஒஸ்திரிய அரசாங்கத்தின் இலகு கடன் உதவித்திட்டத்தின் கீழ் மஹியங்கனை மக்களுக்கு சுத்தமான நீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்; நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பொதுமக்களிடம் ஜனாதிபதி கையளித்தார். இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு  சுத்தமான குடிநீர் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X