2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பாகிஸ்தானிலிருந்து தீர்வையற்ற முறையில் பாஸ்மதி அரிசி'

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

பாகிஸ்தானிலிருந்து சுங்கத்தீர்வையற்ற முறையில் ஆறாயிரம் மெற்றிக்தொன் பாஸ்மதி அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு நேரடியாக வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் பாகிஸ்தான் பிரதிஉயர் ஸ்தானிகர் ஸர்பாஸ் அஹமட் கான்ஸிப்ரா தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் பாகிஸ்தான் பிரதிஉயர்ஸ்தானிகருக்கும் இடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தகவலை பிரதிஉயர்ஸ்தானிகர் வெளியிட்டார்.

2002ம்ஆண்டில் இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் 4,000 பொருட்களுக்கு வரி விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து அதன் உச்சக்கோட்டாவான 6,000 மெற்றிக்தொன் பாஸ்மதி அரிசியையும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு வழங்குவதற்கு தனது நாட்டின் வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது என்றார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற்கொண்ட முயற்சியினாலேயே இந்த விவகாரத்தை கையாளும் பாகிஸ்தானின் வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபை இந்தமுடிவை எடுத்துள்ளதாக பிரதிஉயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாகிஸ்தான் அரச மட்டத்தில் மேற்கொண்ட செயற்பாடுகளை நினைவுகூர்ந்த அவர், அமைச்சருக்கு தனது பாராட்டுதல்களையும்தெரிவித்தார்.

பிரதிஉயர்ஸ்தானிகரின் இந்தஅறிவிப்புக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் நன்றிகளை வெளிப்படுத்திய அமைச்சர் ரிசாட், இலங்கை பாகிஸ்தான் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் தமது கருத்துக்களையும் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற நான்காவது இலங்கை - பாகிஸ்தான் இணைந்த உத்தியோகபூர்வ கூட்டத்தில் 20002ஆம் ஆண்டு வரிவிதிவிலக்களிக்கப்பட்ட பொருட்களில் உள்ளடங்கிய பாஸ்மதி அரிசியின் உச்சளவிலான ஆறாயிரம் மெற்றிக்தொன் அரிசியை பெற்றுக்கொள்ள இலங்கை இணக்கம் தெரிவித்திருந்தது.

அப்போது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரிசியை வாங்குவதில் ஆர்வம் காட்டாமையினால் பாஸ்மதி அரிசி தனியாருக்கு வழங்கப்பட்டது.

இப்போது முழுக்கோட்டாவான இந்த ஆறாயிரம் மெற்றிக்தொன் அரிசியையும் மீண்டும் கொள்வனவு செய்வதற்கு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் விருப்பம் தெரிவித்ததை அடுத்தே அதற்கு வழங்கப்பட உள்ளது.

இலங்கையின் உள்ளூர் அரிசி உற்பத்தி 4.8 மில்லியன் மெற்றிக்தொன் ஆகும். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் உட்பட விசேட வகையில் இறக்குமதி செய்யப்படும் அரிசி அடங்கலாக 20,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. அத்துடன் 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இலங்கை வருடமொன்றுக்கு தலா 2.7 பில்லியன்அரிசி நுகரப்படுகின்றது.

இதைவிட இலங்கையர் ஒருவர் வருடமொன்றுக்கு 90 – 100 கிலோகிராம் அரிசியை உணவாக உட்கொள்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X