2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'புதிய யாப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது'

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

யாப்புத் திருத்த முயற்சிகள் முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையுமா என்ற சந்தேகம் கலந்த பயம் பரவலாகக் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகம் அடங்கலாக இலங்கையின் பெரும் பான்மை மக்கள் இதற்கு ஏற்கனவே ஆணை வழங்கி விட்டார்கள். எனவே இதனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியல் தீர்வொன்றை உள்ளடக்கிய புதிய யாப்பு என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாக மாறிவிட்டிருக்கிறது  என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியாலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று யாப்பு திருத்தம் தொடர்பான ஆய்வுக் கருத்தரங்கொன்று காத்தான்குடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

'யாப்புத் திருத்த முயற்சிகள் முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையுமா என்ற சந்தேகம் கலந்த பயம் பரவலாகக் காணப்படுகிறது. எனவே, இந்த யாப்புத் திருத்த யோசனைகளை தடுத்து நிறுத்த முடியுமா? என்றும் சிலர் சிந்திக்கின்றனர். இங்கு இரண்டு விடயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக, யாப்புத் திருத்த யோசனைகளுக்கு முஸ்லிம் சமூகம் அடங்கலாக இலங்கையின் பெரும்பான்மை மக்கள் ஆணை வழங்கி விட்டோம். அந்த ஆணையைத் தான் கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி நாம் வழங்கினோம். ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியினால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தில் யாப்புத் திருத்த முன்மொழிவுகள் விரிவாக முன்வைக்கப்பட்டிருந்தன என்பதனையும் அதனை ஏற்றுக்கொண்ட அடிப்படையிலேயே எமது வாக்குகளை வழங்கி புதிய அரசாங்கத்தினை உருவாக்கினோம் என்பதனை மறந்து விடக்கூடாது.

அடுத்ததாக, நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அல்லது இந்த அரசாங்கமே விரும்பினாலும் கூட இந்த யாப்புத் திருத்தத்தை தவிர்க்க முடியாது என்பதற்கு இன்னுமொரு காரணம் இருக்கிறது.

அதுதான் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை கொடுத்துள்ள உறுதி மொழியாகும். கடந்த மனித உரிமை மாநாட்டுத் தீர்மானம் என்பது முந்தைய தீர்மானங்களைப் போன்று இலங்கைக்கு எதிராக ஏனைய நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அல்ல. அது இலங்கையினுடைய ஒப்புதலுடன் ஏனைய சர்வதேச நாடுகளும் இணைந்து உருவாக்கிய தீர்மானமாகும்.

அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட அரசியற் தீர்வொன்றின் மூலம் இன முரண்பாடுகளுக்கு முடிவு கட்டுதல், ஜனநாயகத்தை வலுப்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்துதல் என்பன இலங்கை சர்வதேச நாடுகளுக்கு வழங்கியுள்ள உறுதி மொழிகளாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் பார்க்கும் போது இனப் பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வும் அதனை உள்ளடக்கிய புதிய யாப்பு என்பதும் தவிர்க்க முடியாத யதார்த்தமாக மாறி விட்டிருக்கிறது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X