2025 மே 19, திங்கட்கிழமை

'பொன்னன்வெளி விவசாயக் காணியை பெற்றுத்தரவும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள 600 ஏக்கர் கொண்ட பொன்னன்வெளி விவசாயக் காணியை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாவிடின், தற்போதைய பெறுமதியில் அக்காணிக்குரிய நட்டஈடு பெற்றுத்தரப்பட வேண்டுமென பொன்னன்வெளிக்கண்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒலுவில் கிராம மக்களுக்குச் சொந்தமான இக்காணியை பெற்றுத்தருமாறு கோரி நல்லிணக்கப் பொறிமுறை பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியிடம் இன்று புதன்கிழமை மகஜர் கையளித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர்; எம்.ஐ.இஸ்மாயில் தெரிவித்தார்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '1940ஆம் ஆண்டு ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயிகள் பொன்னன்வெளிக் காணியில்; காடு வெட்டி விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவந்தனர். விவசாயச் செய்கைக்காக பல சிரமங்களுக்கு மத்தியில் நீர்ப்பாசன வசதியையும் இவ்விவசாயிகள் பெற்றிருந்தனர்.

இங்கு விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவந்த 176 விவசாயிகளில் 80 விவசாயிகளுக்கு உத்தரவுப்பத்திரங்கள் கல்லோயா அபிவிருத்திச்சபையால் 1950ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்டன. இதனை அடுத்து, 1974ஆம் ஆண்டு  இவ்விவசாயிகளுக்கு காணிக்கச்சேரி நடத்தப்பட்டு, அப்போதைய அரசாங்க அதிபரால் 150 விவசாயிகளுக்கு உத்தரவுப்பத்திரங்கள்; வழங்கப்பட்டன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்நிலையில், 1987இல் தீகவாபி புனித பிரதேசமாக்கப்பட்டதை அடுத்து புதிதாக மாத்தறை, ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களிலிருந்து அங்கு அழைத்துவரப்பட்ட பெரும்பான்மையினச் சகோதரர்கள் அக்காணியை பிடித்ததுடன், அக்காணியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவந்த முஸ்லிம் விவசாயிகளையும் விரட்டினர்.

மேலும், இக்காணியில் இன்றுவரை பெரும்பான்மையினத்தவர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இக்காணி தொடர்பில் சில முஸ்லிம் விவசாயிகள்; வழக்குத்தாக்கல் செய்து, முஸ்லிம் விவசாயிகள் சார்பில் தீர்வு வழங்கப்பட்டது. இதன்போது, மாற்றுக்காணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தும் அது இதுவரையில் வழங்கப்படவில்லை. ஆகவே, இக்காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X