2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் பழிதீர்க்கப்படுகின்றனர்: எம்.எஸ்.உதுமாலெப்பை

Thipaan   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சுய நல அரசியல் நோக்கத்துக்காக மாற்றுக்கட்சி ஆதரவாளர்களை பழிதீர்க்கும் நடவடிக்கைகளை நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் முன்னெடுத்துவருகின்றார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

நல்லாட்சியில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பயன் அடையக் கூடிய எந்த விதமான திட்டங்களையும் ஹக்கீம் முன்னெடுக்க வில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய ஊழயர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி நமது மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் செயல்படாமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக அம்பாறை மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் பணி புரியும் ஊழியர்களை வெளிமாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்குமாக அவசர இடமாற்றங்களை செய்து அமைச்சர் ரவூப் ஹக்கீம், 100 நாட்கள்; வேலைத்திட்டத்தில் சாதனை புரிந்துள்ளார்.

அரசியல் அதிகாரம் கிடைத்த சந்தாப்பங்களிலெல்லாம் அதனை உச்ச கட்டமாகப் பயன்படுத்தி மக்களுக்கு பெரும் பணியாற்றிய பெரும் தலைவராக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் திகழ்ந்தார்.

அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன் இணைந்து ஆற்றிய சேவைகள் வரலாற்று முக்கியத்துமானதாகவே இன்றும் உள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் வரலாற்றில் அதிகமான முஸ்லிம்களுக்கும் கணிசமான தமிழ் சகோதரர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கினார்.

அந்தப் பாசறையில் வளர்ந்த தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாவுல்லா நீர்வழங்கல் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனது அமைச்சின் உச்ச அதிகாரத்தை பாவித்து விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் விசேட நீர்வழங்கல் திட்டங்களை அவசரமாக உருவாக்கி மக்களுக்கான நீர் வினியோகத்தை வழங்கினார்.

அது மட்டுமல்லாது தொழிலில்லாமல் இருந்த அதிகமான இளைஞர், யுவதிகளுக்குமான நியமனங்களை வழங்கினார்.

எனது அரசியல் அதிகாரத்தின் ஊடாக கிழக்கில் வாழும் மூவின மக்களின் இன ஒற்றுமைக்கு பெரும் பங்காற்றினார். கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு கிழக்கில் வாழும் மூவின மக்களும் நிரந்தரமாக நிம்மதியாக வாழும் சூழ்நிலைக்காக தைரியமாக குரல் கொடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ், மஹிந்த அரசாங்கத்தில் அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்து விட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு 07 தினங்களுக்கு முன் புதிய அரசியல் கூட்டணியுடன் இணைந்து கொண்டவர்கள்.

இவர்கள் இன்று நல்லாட்சி என்ற போர்வையில் தங்களின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவைகள் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல் மஜீட் கிழக்கு மாகாண சபைக்கு போகக் கூடாது என்பதற்காக திட்டமிட்ட முறையில் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களினால் தோற்கடிக்கப்பட்டமையை பொத்துவில் பிரதேச மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

அப்துல் மஜீதை அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களே தோற்கடித்தனர். அதே போன்றுதான் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளி கல்முனை (றசாக்) ஜவாத்தும் தோற்கடிக்கப்பட்டார் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .