2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சுற்றறிக்கைகளை தமிழிலும் வெளியிடுமாறு பணிப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண அமைச்சுக்களினால் வெளியிடப்படும் சகல சுற்றறிக்கைகளையும் தமிழிலும் அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திங்கட்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் இந்த வருடத்துக்கான முதலாவது  சுற்றறிக்கை, சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமதின் கவனத்துக்கு  கொண்டுவரப்பட்டதையடுத்து, உடனடியாக சகல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் தமிழில் அந்த சுற்றறிக்கையை மீள அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர் கல்வி அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் குறிப்பிடுகையில்,

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் இந்த மாகாணத்தில் மூவின மக்களும் பேசுகின்றனர்.

கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் தமிழ் மக்கள் பேசுகின்ற தாய் மொழியாக தமிழ் மொழி உள்ளது.
அதேவேளை சகவாழ்வின் அடிப்படையில், இருமொழிப் பயன்பாட்டையும் கருத்திற் கொண்டு தமிழ் சிங்களம் ஆகிய மொழிகள் அரச நிருவாக அதிகாரிகளால் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

ஆகையினால் இருமொழிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கி சகல தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் தமிழ் மொழியிலும் சிங்கள மொழிப்பாடசாலைகளுக்கு சிங்கள மொழியிலும் சுற்று நிரூபத்தை  அனுப்புமாறு உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் தான் உத்தரவைப் பிறப்பித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் அமைந்த சுற்றறிக்கை தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கள், இன்னும் பல அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே முதலமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .