2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'பெண்களும் சுயதொழிலில் ஈடுபடவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பெண்களும் சுயதொழில் முயற்சிகளில் பங்கு கொண்டு நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யும்போதே, அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றிக்கொள்ள முடியும் என்று அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக மாதர் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்  நேற்று வியாழக்கிழமை (23) அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போது அவர்களின் குடும்ப நிலையை  மாற்றிக்கொள்ள முடியும். குடும்பத்தின் தலைவர்களான ஆண்கள் மட்டும் தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்ய முடியாது.

நவீன உலகின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதுடன், வாழ்க்கைச் செலவீனங்களும் பாரியளவில் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றுக்கு முகம் கொடுக்கும் விதத்தில் பெண்களும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடும் வகையில் முறையான பயிற்சிகளை பெற்றுக் கொள்ள  முயற்சிக்க வேண்டும்.

படித்துவிட்டு வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்காக அரசாங்கம் பல்வேறுபட்ட திட்டங்களையும் சுயதொழில் முயற்சிக்கான பயிற்சி நெறிகளையும் வழங்கி வருகின்றது. இதனை முறையாகப் பயன்படுத்தி மற்றவர்களின் உழைப்பில் தங்கி இருக்காது  தாங்களும் சுயமாக வருமானமீட்டும் தொழில் முயற்சிகளில் ஈடுபாடு கொள்ள வேண்டும்' என்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.ஏ.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ், அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எச்.கலிலுர் ரஹ்மான், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜீமுதீன், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் வஹாப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X