2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'19ஆவது திருத்தச்சட்டம், ஜனநாயகத்தை மீட்க கிடைத்த இறுதி வாய்ப்பு'

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்ட மூலம்  நிறைவேற்றப்படுமானால் நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் தழைத்தோங்குவதற்கு வழிவகுக்கும், இச்சட்ட மூலமானது  சர்வாதிகாரத்துக்கு விடை கொடுத்து ஜனநாயகத்தை மீட்பதற்கு கிடைத்த இறுதி வாய்ப்பாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதான அமைப்பாளர் எம். ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.

இந்த வாய்ப்பினை கட்சி பேதமின்றி சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்தி ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்தார்;.

சம்மாந்துறை பஸார் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் 19ஆவது திருத்தச்சட்ட மூலம் பற்றி நேற்று சனிக்கிழமை (25) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் காணப்படுகின்ற வரையறையற்ற அதிகாரங்களை நீக்குதல், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல், தகவல் அறியும் உரிமையை அரசியலமைப்பின் அடிப்படை அங்கமாக கொண்டுவருதல், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒருவருடத்தினால் குறைவடைகின்றமை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளாக குறைவடைகின்றமை, இரண்ட தடவைக்கு மேல் ஒருவர் ஜனதிபதியாகப் பதவி வகிக்க முடியாது இவை  உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக விழுமியங்கள்  கொண்டதாக 19ஆவது திருத்தச்சட்ட மூலம் அமைந்துள்ளது. இது ஜனநாய நகர்வுக்கு உந்து சக்தியாக அமையவுள்ளது.

நாட்டில் அதிகரித்திருக்கும் ஊழல்  மோசடிகளைக் கட்டுப்பத்தி சட்டத்தை நிலைநாட்டி, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில்  19ஆவது திருத்தச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு ரீதியிலும் அரசியல் கலாசாரத்திலும் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்வதற்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தற்போது மிகவும் அருமையான சந்தர்ப்பம் நாட்டுக்கு கிடைத்துள்ளது.

தற்போதைய நடைமுறையிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு 1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்று முதல் நடைமுறையில் இருந்து வரும் இந்த யாப்பில் ஒருவர் இரு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற சரத்து இருந்தது.

இந்த சரத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் யாப்புக்கான 18ஆம் திருத்தத்தின் ஊடாக ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்று மாற்றி அமைத்தார்.

அத்தோடு அரசியல் யாப்புக்கான 17ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களும் 18ஆம் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இச்செயற்பாடுகள் இந்நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்குப் பெரும் சவாலாக மாத்திரமல்லாமல் நாட்டைச் சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லக்கூடியதாகவும் அமைந்தது.

இந்நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும் அதன் கட்டமைப்புக்களையும் வலுப்படுத்துவதற்கு இத்திருத்தம் பெரிதும் உதவும்.

இவ்வாறு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் 19ஆவது திருத்தத்தை, ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்த விரும்பும் எவரும் விமர்சிக்கவோ எதிர்க்கவோ மாட்டார்கள்.

எனவே, நாட்டின் எதிர்காலத்துக்கும் சிறந்த அரசியல் கலாசாரத்துக்கும் வழிவகுக்கக்கூடிய இந்த 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X