2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வேப்பையடி மதுபானச்சாலையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்,ஏ.எஸ்.எம்.முஜாஹித் ,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேப்பையடி மதுபானச்சாலையை உடனடியாக மூடுமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள், நேற்று வியாழக்கிழமை (30) வீரமுனை - வேப்பையடி பிரதான வீதியை  மறித்து  பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒன்பது வருடங்களாக இயங்கிவருகின்ற இந்த மதுபானச்சாலைக்கு அருகில் பாடசாலை, வைத்தியசாலை, கோவில்கள்,  குடியிருப்புக்கள் காணப்படுகின்றன.

இந்த மதுபானச்சாலையால்  பாரிய சமூக சீர்கேடுகள்; இடம்பெறுவதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

வேப்பையடியிலுள்ள பழைய  புகையிலை பண்ணைக்கு அருகிலிருந்து  ஆரம்பமாகிய  ஆர்ப்பாட்டப் பேரணி, வீரமுனை -வேப்பையடி பிரதான வீதியை வந்தடைந்து, அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களே பெருமளவில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன். செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் சி.குணரெட்ணம், இந்து கிறிஸ்தவ, பௌத்த மதகுருமார்கள்  உள்ளிட்டோர் வருகைதந்திருந்ததுடன், 11 பொது அமைப்புக்கள் கையொப்பமிட்ட மகஜர்களும்  இவர்களிடம் கையளிக்கப்பட்டன.

நாவிதன்வெளி  பிரதேச செயலாளர் சு.கரன் மதுபானச்சாலையை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

 'மதுபானச்சாலையை அகற்றி மதுவுக்கு அடிமையானவர்களை காப்பாற்று', 'மதுபானச்சாலையை  மூடி எங்கள் கணவன்மாரை காப்பாற்று' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக  அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .