2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் 81 தொழுநோயாளர்கள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2015 மே 01 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 2015ம் ஆண்டு வரைக்கும் 81 தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

தொழுநோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் மாநாடு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.சலாஹூதீன் தலைமையில் நேற்று (30) நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 'இனங்காணப்பட்ட தொழு நோயாளர்களில் அதிகமானவர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படுகின்றனர் இது இப்பிராந்தியத்தில் காணப்படும் மொத்த தொழு நோயாளர்களில் 37.66 வீதமாகும். ஏனைய நோயாளர்கள் கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காணப்படுவதாக் தெரிவித்தார்.

எமது பிராந்தியத்தில் வழமையாக நடாத்தப்பட்டு வருகின்ற கிளினிக்குகளுக்கு மேலதிகமாக 06 நடமாடும் தோல் நோய்க் கிளினிக்குகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றின் போது 464 நோயாளர்களுக்கு தோல் நோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 287 சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது பிராந்தியத்தில் தோல் வைத்திய நிபுணர் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாக காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நோய் தொடர்பான விளிப்புணர்வூட்டும் விடயத்தில் ஊடகங்களின் பங்கு அளப்பரியதாகும் அந்த வகையிலேதான் இன்று இந்த ஊடக மாநாட்டை விரைவாக ஏற்படுத்தி உங்கள் முன் தெரியப்படுத்துகின்றோம் இந்த நோயை கட்டுப்படுத்தும் விடயத்தில் மக்களுக்கு விளிப்பூட்டல் செய்யும்; தார்மீக பணியினை ஊடகங்கள் செய்து வருகின்றமை காலத்தின் கட்டாயமாகும்.

இந்த நோயானது இலகுவாக தழும்புகள், மற்றும் கட்டிகள் போன்ற வடிவத்தில் வெளிக் கொணரப்பட்டபோதும் இதன் தாக்கம் உடனடியாக இனங்காணமுடியாது. இதன் தாக்கம் 2 - 10 ஆண்டுகளின் பின்னர்தான் இனங்காணக்கூடியதாக இருக்கும்.  தொழுநோய் என்பது மனிதனில் இருந்து மனிதனுக்கு தொற்றக்கூடிய ஒரு நோயாகும் வேறு எந்த மிருகங்களிலிருந்தும் இது தொற்றாது எனவும் தெரிவித்தார்.

இந்த ஊடக மாநாட்டில் கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.இஸ்ஸதீன், பிராந்திய தொற்று நோய்ப்பிரிவு வைத்திய அதிகாரி சீ.என்.செனரத், பிராந்திய தாய் சேய் மருத்துவ வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பஸால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .