2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

'சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாட துணை போகமுடியாது'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 08 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு தன்னால் துணை போகமுடியாது என்று கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ்  குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை  விடுத்துள்ள அறிக்கையில், 'சாய்ந்தமருது நகரசபையின்  கோரிக்கையை வென்றெடுப்பதற்காக பதவிகளை உதறித் தள்ளிவிட்டு மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடவும் நான் தயாராகவுள்ளேன்' என்றார்.  

'சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபையொன்று  வேண்டுமென்று  அந்த சபை இல்லாதொழிக்கப்பட்டது முதல் எமது மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள  நீண்டகாலக் கோரிக்கையாகும்.  இதற்காக கடந்த பல வருடங்களாக பொது அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டுவந்தது.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து நூறு நாள்  வேலைத்திட்டத்தில் இதனை  வெற்றி கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில்,  சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இக்கோரிக்கையை கையில் எடுத்து அதற்கான தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவந்தது. எனினும்,  மேற்படி நிர்வாகமும்  ஏமாற்றத்துடன் தற்போது  இக்கோரிக்கையை கைவிடும் நிலைக்கு வந்துள்ளதாக  அறிகின்றோம்.

இந்நிலையில் எனது நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்புகின்றீர்கள். இது விடயமாக நான் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆரம்பத்தில் பள்ளிவாசல் என்னை அழைத்து இதற்காக ஒத்துழைப்பு கோரியபோது, நான் இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்காக முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும்  பள்ளிவாசல் முன்னெடுக்கும் அனைத்து போராடங்களிலும் பங்கேற்பேன் எனவும் இதற்காக அரசியல் ரீதியாக எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுத்து எனது பதவிகளை இழப்பதற்கும் தயாராக உள்ளேன் என்றும் உறுதியளித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்தே எமது கல்முனைத் தொகுதியின் அரசியல் தலைமையும் உள்ளூர் அரசியல்வாதிகளும் இக்கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து ஒத்துழைப்பதற்கு முன்வந்திருந்தனர். இதன் பின்னர் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை பள்ளிவாசல் குழுவினர் சந்தித்து அவரது இணக்கத்துடன் அவரது ஏற்பாட்டில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவை சந்தித்து அவரது உத்தரவாதமும் பெறப்பட்டிருந்தது.

அந்த இடத்திலேயே சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை வர்த்தமானிப் பிரகடனம் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பள்ளிவாசல் குழுவினர் முன்னிலையில் அமைச்சர் கரு ஜயசூரிய தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் பல மாதங்கள் கடந்தும் வர்த்தமானிப் பிரகடனம் வெளிவரவில்லை. இது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இதிலுள்ள மர்மம் துலங்கப்பட வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் மக்களும் அங்கலாய்க்கின்றனர்.     
சாய்ந்தமருதுக்கு நகர சபை உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு எதிர்ப்புகள், சவால்கள் மத்தியில் கிழக்கு மாகாண சபையில் என்னால் தனி நபர் பிரேரணையை கொண்டு செல்லப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதுபோன்று சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் முயற்சியினால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை வழங்க முடியும் என பரிந்துரை செய்து உள்ளூராட்சி அமைச்சுக்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.   

ஆனால் எஞ்சியுள்ள கல்முனை மாநகர சபை ஆணையாளர் அல்லது மேயரின் கடிதமானது இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உண்மையில் இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குட்பட்ட சபை என்பதால் ஏன் அது இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதற்கான முழுப்பொறுப்பையும் தலைமைத்துவமே ஏற்க வேண்டும்.

அமைச்சரின் உத்தரவாதத்தின் பின்னர் இது விடயமாக பள்ளிவாசல் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. அதாவது எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்திப்பதற்கும் உள்ளூராட்சி அமைச்சு நிர்வாக மட்டத்தில் என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு கூட ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  

இதனால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர். எமது நீண்ட காலக் கனவு நிறைவேறப் போகிறது என்கின்ற பூரிப்புடன் நாளும் பொழுதும் எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு நான் முழுமையாக கட்டுப்பட்டு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று நான் மீண்டும் மிகவும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்று இறை இல்லமான பள்ளிவாசலில் வைத்து சத்தியம் செய்வது போல் நான் அளித்த வாக்குறுதிகளை ஒருபோதும் மீற  மாட்டேன்.
எமது மக்களின் நீண்ட கால தாகத்துடனும் உணர்வுகளுடனும் விளையாடுவதற்கு என்னால் ஒருபோதும் துணை போக முடியாது. இது விடயத்தில் அரசியல் பதவிகளை உதறித் தள்ளி விட்டு மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் நான் தயாராகவுள்ளேன் என்பதை ஆணித்தரமாக கூறிக் கொள்கின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X