2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கல்வியில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே ஏனைய துறைகளிலும் வளர்ச்சியடைய முடியும்

Sudharshini   / 2015 ஜூன் 28 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஒரு பிரதேசம் சகல துறைகளிலும் அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தால் அப்பிரதேசம் கல்வியில் வளர்ச்சிகண்ட பிரதேசமாக மாற வேண்டும். கல்வியில் வளர்ச்சி கண்டால்தான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய முடியும் என்று கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'அந்நூரில் கற்ற மாணவர் ஒன்றியம்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) அந்நூர் தேசியபாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

முஸ்லீம்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட குர்ஆனின் முதல் வசனம் கல்வி தொடர்பாகவே அருளப்பட்டது. அதனால் நாம் ஒவ்வொருவரும் எமது பகுதியில் கல்வியை அபிவிருத்தி செய்வதன் மூலம் எமது பிரதேசம் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி அடையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் இரண்டாம் தலைமைத்துவத்துக்கு வெற்றிடமாகவுள்ள ஒரு பிரதேசமாகத்தான் காணப்படுகின்றது. அதிபர் வெற்றிடமாக இருந்தாலும் சரி, அரசியல் வெற்றிடமாக இருந்தாலும் சரி இரண்டாம் தலைமைத்துவத்துக்கு ஒருவரை ஏற்கனவே இருப்பவர்கள் அறிமுகப்படுத்தவது குறைவு. அதனால் அடுத்த தலைமை என்பது கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் கேள்விக்குறியாகவே உள்ளது.

முஸ்லீம்களின் இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையை தலைமைதாங்கி நடாத்திவந்தார்கள். அவரது இறுதி நேரத்தில் அபூபக்கர் ரலியல்லாஹூ அவர்கள் தொழுகையை தலைமைதாங்கி நடாத்தினார்கள். அப்போது மக்களுக்கு விளங்கிவிட்டது.  முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்களுக்குப் பிறகு தலைமைதாங்கும் பொறுப்பை அபூபக்கருக்கு வழங்கிவிட்டார்.

அதனால், அவருக்குப் பிறகு அபூபக்கர் இருப்பார் என்று அவ்வாறு தலைமைகள் தனக்குப் பிறகு ஒருவரை வளர்த்து விட்டுச் செல்ல வேண்டும்.

கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் இன்று ஒரு பாடசாலையில் உள்ள அதிபர் இடமாற்றம் பெற்றுச் சென்றாலோ அல்லது ஓய்வு பெற்றுச் சென்றாலோ அடுத்த அதிபர் ஒருவரை தேடுவதுக்கு கால தாமதம் எடுக்கும் பிரதேசமாகத்தான் உள்ளது. அதே போன்றுதான் அரசியல் தலைமையும் தற்போதுள்ள ஒருவருக்குப் பிறகு அடுத்தவர் யார் என்று பார்த்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தனது கற்பனையில் கூறிக் கொள்வதாகத்தான் தெரிகின்றது என தெரிவித்தார்.

அந்நூரில் கற்ற மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி கோட்ட கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பளர் ஐ.எல்.மஹ்றூப் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X