2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அம்பாறை மத்திய முகாம் கொலை: சாட்சியளிக்க அழைப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மத்திய முகாமில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் மூவரால்  5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஆஜராகுமாறே அம்பாறை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திரவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் தொடர்பில் மரண விசாரணை நடத்திய அன்றிருந்த அம்பாறை முன்னாள் நீதவான் மற்றும் மரண விசாரணை மேற்கொண்ட அன்றிருந்த  அம்பாறை நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆகிய இருவருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மத்திய முகாமின் பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவத்தினத்தன்று கடமையில் இருந்த காமினி குமாரசிங்க, வசந்த குமார மற்றும் நிமல் கருணாரத்ன ஆகிய முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் மூவரும் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளின் பட்டியலில் உள்ள இரண்டாவது பிரதிவாதியான வசந்த குமார மரணமடைந்துவிட்டமையால் அவருடைய பெயர் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஐவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தமை, அவர்களுடைய சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 43 குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டே சட்டமா அதிபரினால் அம்பாறை மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மத்திய முகாமில் இருந்த பொன்னையா சதாசிவம், கணபதிபிள்ளை குமாரசுவாமி, வேலுப்பிள்ளை பாக்கியராஜா, வெல்லங்குட்டி சுந்தரலிங்கம் மற்றும் குமாரசுவாமி தங்கநாயகம் ஆகியோரே படுகொலைச்செய்யப்பட்டவர்களாவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X