2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

ஜனாதிபதியின் ரூ.1,750 வாக்குறுதி காற்றுடன் பறந்துவிடக்கூடாது

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக் உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், இவ்வருட (2025) இறுதிக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பவத்தை 1,750 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

பண்டாரவாளை பொது விளையாட்டரங்கில், ஒக்டோபர் 12ஆம் திகதி அன்று நடைபெற்ற மலைய சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அறிவிப்பாக இருக்கின்றது.

எனினும், அவ்வாறு சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்றும், தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் ஏமாற்றும் அறிவிப்பை விடுத்துள்ளது என மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

22 கம்பனிகளின் கீழிருக்கும் தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும் முன்னர், அரசாங்கத்தின் கீழிருக்கும் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன. 

 “உலகச் சந்தையில் இலங்கை தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தேயிலைக்குச் சரியான விலை கிடைப்பதில்லை எனவும் உற்பத்திக்காக அதிக செலவு மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைவிடத் தொழிலாளர்களுக்கு ஏனைய நலன் திட்டங்களுக்கு அவர்கள் அதிகமான பணத்தைச் செலவு செய்வதாகவும் கூறியிருந்தார்கள்.

அவர்கள் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும் கடந்த காலங்களில் சொல்லப்பட்டன. உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு கோரி பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக, ரணில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேயிலை இறப்பர், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,700 ஆக உயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பைத் தொழில் திணைக்களத்தால் வெளியிட்டது.

மே 21, 2024 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், நாளாந்த குறைந்தபட்ச ஊதியம் 1,350 ரூபாய், உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவு 350 ரூபாய் என்ற அடிப்படையில் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பையோ அல்லது தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியையோ அரசாங்கம்  செயல்படுத்தத் தவறியுள்ளது. வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன. 

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டிக்காப்பதில் முதுகெலும்பாக நிற்கும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கின்றது.

கடந்த கால அரசாங்கங்களைப் போல, தேர்தல்கள் வாக்குறுதிகள் அல்லாமல், அம்மக்களின் வாழ்க்கை மேம்படுத்துவதற்காகவும், பொருளாதார ரீதியில் அவர்களை கட்டியெழுப்பும் வகையிலும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கியிருக்கும் அடிப்படை சம்பளமான 1,750 ரூபாயை வழங்கவேண்டும் என்பதே சகலரும் எதிர்பார்ப்பாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .