Janu / 2026 மார்ச் 23 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தனது வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பாரிய பொருளாதார மற்றும் சமூகப் மாற்றத்தின் குறுக்குச் சந்தியில் நின்று கொண்டிருக்கிறது. ‘இருண்ட காலத்தின்’ எச்சங்கள் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், மீண்டெழும் நம்பிக்கையும் விளிம்புநிலை மக்களின் ஏமாற்றமும் கலந்த ஒரு சூழலையே இன்றைய இலங்கையின் பிம்பமாகப் பார்க்க முடிகிறது.
பொருளாதார ரீதியில் ஓரளவு ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறினாலும், சாமானிய மக்களின் சமையலறைகளில் இன்னும் அமைதி திரும்பவில்லை. எரிபொருள் விலை ஏற்றம், மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வு என்பன நடுத்தர மற்றும் வறிய வர்க்கத்தினரைத் தங்கள் உயிர்களை மாய்க்கும் விளிம்பிற்கே தள்ளியுள்ளன.
போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் விடுத்து வரும் கட்டண உயர்வு எச்சரிக்கைகள், முச்சக்கரவண்டி மற்றும் கொள்கலன்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இவையெல்லாம், ஏற்கனவே நலிந்து போயிருக்கும் மக்களின் பொருளாதாரப் பலத்தை மேலும் சிதைப்பதாகவே அமையும்.
மறுபுறம், அண்மையில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் படுகொலைச் சம்பவம் போன்ற சமூகச் சீர்குலைவுகள், பொருளாதார நெருக்கடி எவ்வாறு ஒரு சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பையே சிதைக்கிறது என்பதற்குச் சான்றாகும். வறுமை, போதைப்பொருள் கலாசாரம் மற்றும் குடும்பச் சிதைவுகள் என்பன குற்றச் செயல்களைத் தூண்டும் காரணியாக மாறியுள்ளன. சட்டமும் ஒழுங்கும் வெறும் காகித அளவிலன்றி, நடைமுறையில் பலப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கல்வித் துறையிலும் சவால்கள் குறைந்தபாடில்லை. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் ஒரு நாள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி, வீட்டிலிருந்தே கற்கும்
முறையை அமுல்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்றும் தொடர்கிறது. இது எதிர்காலச் சந்ததியினரின் கல்வித் தரத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கும், உள்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் ஒரு மெல்லிய நூலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வரிச் சுமைகளைக் குறைப்பதும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதும் மட்டுமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான ஒரே வழியாகும். வெறும் மேடைப் பேச்சுகளோ அல்லது தற்காலிக நிவாரணங்களோ நீண்டகாலத்
தீர்வைத் தராது.
இலங்கை மக்களுக்குத் தேவைப்படுவது அரசியல் இலாபங்களுக்காகத் தீட்டப்படும் திட்டங்கள் அல்ல; மாறாக, உழைப்பவனுக்கான ஊதியமும், உண்பவனுக்கான உணவும், வாழ்வதற்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தேசமேயாகும். அந்த இலக்கை நோக்கித் துரிதமாகவும் நேர்மையாகவும் பயணிப்பதே ஆட்சியாளர்களின் முன்னுள்ள ஆகப்பெரிய சவாலாகும்.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago