2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

தலை தூக்கும் முன்னர் எச்சரிக்கையாக இருப்போம்

Editorial   / 2023 மே 14 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர்களில் சிலருக்கு அவ்வப்போது அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல், தாம் நினைத்தபடி நடந்துகொள்வர். இதனூடாக தங்களுக்குத் தாங்களாகவே விளைவுகளைத் தேடிக்கொள்வர்.

பலமுறை சுட்டிக்காட்டியதைப் போல, இயற்கையின் மீது தங்களுடைய அடாவடித்தனங்களை காண்பித்து இயற்கையின் கோர தாண்டவத்துக்குள் சிக்கிக்கொள்வர். பெரும் தொற்றுக்களுக்கும் இலக்காகிவிடுவர்.

மழை காலத்துக்கு முன்னர், சுற்றாடலை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் விடுவதன் ஊடாக, நுளம்புகள் பெருகி, பல்வேறான காய்ச்சல்களுக்கு வழிசமைத்துவிடும். எனினும், முன்கூட்டிய ஏற்பாடுகளின் ஊடாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தற்பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கிராமங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு வெளியே, டெங்கு நுளம்புகளின் தாக்கம் குறைவாகும். எனினும், நகர்புறங்களை பொறுத்தவரையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 33 சிறுவர்கள், பொரளை சீமாட்டி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், புதிய வகையான காய்ச்சலும் பரவிக்கொண்டிருக்கின்றது. மற்றொரு புறத்தில் எலிக்காய்ச்சலும் வேகமாக தலையைத்தூக்குகின்றது.

கொழும்பு,கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களுக்கும் டெங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 700 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

தங்களுடைய வீட்டையும், வீட்டை சுற்றியும் மழைநீர், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தேங்கி நிற்காதவகையில், சுற்றாடலை சுத்தப்படுத்திக்கொண்டால் மட்டுமே டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்க முடியும்.

ஒரு பக்கத்தில் மருந்துகளின் விலை அதிகரிப்பு, மறுபுறத்தில் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தங்களைத் தாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் டெங்கு நுளம்பு தலையைத் தூக்குவதற்கு முன்னர்,   முளையிலேயே கிள்ளி எறியும் வகையிலான திட்டங்களை வகுத்துக்கொள்ளவேண்டும்.

டெங்கு நுளம்பு அதிகமாக பரவும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளை தூங்கவைக்கும் போது கட்டாயமாக நுளம்பு வலைகளை பயன்படுத்தவேண்டும். ஏனைய நேரங்களில் நுளம்புகள் கடிக்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, முன்னேற்பாடுகளை செய்துகொள்வது அவசியம், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்க நேரமில்லை. அரசாங்கத்தினால் ஒவ்வொரு தடவையும் அறிவுறுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. ஆகையால், டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் வகையிலான தேசிய செயற்றிட்டங்களை முறையாக அமுல்படுத்தவேண்டும்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் அவ்வப்போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டும். அதுதொடர்பில் பாடசாலை மட்டங்களில் இதர செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியமாகும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றோம். 05.05.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .