2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

நாடு எதிர்பார்த்த மாற்றம் மாறாமல் கிடைத்துள்ளது

Janu   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு எதிர்பார்த்த மாற்றம் மாறாமல் கிடைத்துள்ளது

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு தெளிவாகியுள்ளது. புதிய ஜனாதிபதியினால் தமது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல தமிழ்மிரர் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்கும் அதேவேளையில், உடனடியாக அவர் முன்பு காணப்படும் சவால்களை எடுத்துப் பார்த்தல் அவசியமாகிறது,

பாராளுமன்றத்தில் வெறும் 3 அங்கத்தவர்களை மாத்திரமே கொண்டிருக்கும் அனுரகுமார திசாநாயக்கவின் கட்சிக்கு, அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் வரை நாட்டை வழிநடத்திச் செல்வது கடினமான காரியமாக அமைந்திருக்கும்.

குறிப்பாக, இதுவரையில் நாட்டின் பொருளாதாரத்தை தற்போதைய நிலைக்கு கொண்டு வருவதில் முன்னைய ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை மேற்கொண்ட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா அல்லது தமது தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை முன்னெடுப்பதா போன்ற பிரச்சனைகள் எழும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், தேர்தல் நடைபெறும் வரை தற்போதுள்ள அமைச்சரவையின் அமைச்சர்களை கொண்டு நாட்டை நிர்வகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசியலமைப்பு விதியாகும். தமது கொள்கைகளுக்கு மாறான, முன்னைய ஜனாதிபதியின் கீழ் அங்கம் வகித்த அமைச்சர்களை கொண்டு எவ்வாறு புதிய ஜனாதிபதி செயற்படப்போகின்றார் என்பதை கூர்மையாக அவதானிக்க வேண்டியுள்ளது.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்த பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு நாட்டில் இலஞ்சம் ஊழல் இல்லாமல் செய்யப்பட்டு, மக்களுக்கு சிறந்த வளமான நாடு ஏற்படுத்தப்படுவதுடன், தாமும் இன்னல்கள், சிக்கல்களின்றி வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலாகும். கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற சில பகிரங்க மோசடிச் செயற்பாடுகளாக, சுகாதாரத் துறையின் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி, சுற்றுலாப் பயணிகளின் வீசா மோசடி பிரச்சனை, மலையக தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான போலி வாக்குறுதி போன்றவற்றை குறிப்பிட முடியும்.

இதுபோன்ற மோசடிகளை எதிர்காலத்தில் தவிர்த்து, வெளிப்படையான, அனைவருக்கும் சமாதானம், நீதி, அமைதியாக வாழக்கூடிய ஒரு தேசத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதியின் முன்னிலையில் காணப்படுகின்றது. அதுபோன்று, இவ்வாறான குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழல்நிலையில் இந்தப் பொருளாதாரத்தை ஆறு மாதங்களில் தலை நிமிர்த்திவிட முடியும் என்பது சாத்தியமற்றது. எவ்வாறாயினும் பொருளாதார மீட்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்ல வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்வதுடன், அந்நியச் செலாவணியை கவர்வது, ஏற்றுமதிக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது போன்றவற்றுடன் முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் மேற்கொள்ளப்போகும் மாற்றம் நாட்டின் எதிர்கால பொருளாதார ஸ்திரத்தன்மையில் முக்கிய தாக்கம் செலுத்தும் விடயங்களாக அமைந்திருக்கும்.

23.09.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .