2024 ஜூலை 27, சனிக்கிழமை

‘புகை’ என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்

Editorial   / 2024 ஜூன் 02 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல கெட்ட பழக்கங்களை வழக்கமாக கொண்ட பலரும், இன்றுடன் விட்டுவிட்டேன், என சபதம் எடுத்து அடுத்த நாளே அதையே மீண்டும்  ஆரம்பித்துவிடுவர். அதில், மது அருந்துதல், புகைப்பிடித்தல், ஆகிய இரண்டையும் கைவிடுவதாக ஒவ்வொரு முக்கியமான நாளிலும் பலரும் சபதம் எடுப்பதை  அவதானித்திருக்க கூடும். அவ்வாறு இன்றும் பலரும் சபதம் எடுத்து, ஏனைய நாட்களில் ஊதித்தள்ளுவதை விடவும் சற்று அதிகமாகவே ஊதித்தள்ளிவிடுவர். ஏனென்றால், மே.31 ஆம் திகதி உலக புகைத்தல் எதிர்ப்பு தினமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. 1988ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானப்படி ஏப்ரல் 07ம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட, அதேயாண்டில்  எடுக்கப்பட்ட  தீர்மானப்படி மே 31ம் திகதி, உலக புகைத்தல் தினம் அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் பல மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.

ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார். புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக 'நாட்டிங்காம்' பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடம் இன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னையநாள் பணிப்பாளர் 'வில்லியம் பொலின்;' வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. 'புகையிலை மதுவைவிட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது.  ஓர் ஆண் வருடமொன்றுக்கு 1900 சராசரியாக சிகரெட்டுகள் புகைக்கின்றனர்.

'பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்'. உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர் என்பதுதான் வெட்கக்கேடானது.

31.05.2024

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .