2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

பாடசாலை நேரத்தில் அரை மணிநேர அதிகரிப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரித்து பிற்பகல் 2 மணிவரை நீடிக்க உள்ளது. இந்நிலையில் இந்த அரை மணிநேர நீடிப்பால், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

பாடசாலைகளுக்குச் சென்று திரும்புவதற்கு பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோர், பாடசாலை வாகனங்களைப் பயன்படுத்துவோர் மேலதிகமாக அரை மணிநேரம் காத்திருக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் என்றால், தங்களுடைய மதிய உணவு நேரத்தில் பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுதல் பாதிக்கப்படும்.

அதுமட்டுமன்றி, ரயில்களில் பயணிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படும்.  ஆகையால்தான், போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கான நியாயமான சம்பள உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தற்போதைய பாடசாலை நேரம் நீட்டிக்கப்படும் என்று கூறுவதன் மூலம், அவர்களுக்கு அதிக கடமைகள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

“கற்பித்தல் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் முன்மொழியப்பட்ட திட்டத்தின் மூலம் அவர்கள் சில உற்பத்தித்திறனை எதிர்பார்க்கிறார்கள். பாடசாலை நேரம் ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்படும் என்று கூறுவதன் மூலம், ஆசிரியர்கள் மாதத்திற்கு இருபது சேவை நாட்களை உள்ளடக்கும்போது மாதத்திற்குக் கூடுதலாக பத்து மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த வழியில், இது ஆசிரியர்களின் சம்பளத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமன்றி, பாடசாலை நிறைவடைந்து, மேலதிக வகுப்புகள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகையால், பாடசாலை நிறைவடைந்து, இன்னும் இரண்டொரு மணிநேரத்துக்குப் பின்னரான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்தை மறுசீரமைக்கவேண்டும்.

இதேவேளை, பெரும்பாலான அரச பேருந்துகள், சீருடைகளில் நிற்கும் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. அத்துடன், பல தூரபிரதேசங்களில் அரச பேருந்து போக்குவரத்து ஒழுங்குமுறையில் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. குற்றச்சாட்டுகள் என்பதை விட, அதுதான் உண்மையாகும். 
ஆகையால், அந்த பிரச்சினையையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரித்தால், முழு கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .