2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பின்புலத்தை ஆழமாய் ஆராயவேண்டும்

Editorial   / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்கிரகங்களின் திருட்டின் பின்புலத்தை ஆழமாய் ஆராயவேண்டும்

 

பல்லின சமூகங்கள், மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் நாட்டில் பேசுதல், நடந்துகொள்ளல் உள்ளிட்டவற்றை மிகக் கவனமாகக் கையாளவேண்டும். ஏனைய மதங்கள், அவர்களின் வாழ்வியல் நெறிகளைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும். அவ்வாறு தெரிந்திருந்தால் பிற மதங்களை நிந்திப்பதற்கு யாருமே முயலமாட்டார்கள். எமது நாட்டைப் பொறுத்தவரையிலும் இது முக்கியமானது.

ஆனால், ஒருவர் பின்பற்றும் மதத்தில் குறைகள் இருப்பதாகக் கூறிக்கொண்டு, மதமாற்றம் செய்யும் செயற்பாடுகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இது ஓர் இனத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்திவிடும்.

அ​தேபோல, அந்த மதத்தின் மத சின்னங்களை அழித்தல், உடைத்தெறிதல், பிற மதங்க​ளின் சிலைகளை, கொடிகளை கொண்டுவந்துவைத்தல் என்பதெல்லாம் கொஞ்சமேனும் ஜீரணிக்கமுடியாத செயல்களாகும். இதனூடாக, இனங்களுக்கு இடையில் மனக்கசப்புகளே ஏற்படும்.

திருகோணமலையில், பிள்ளையார் சிலைக்குமேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதே மிக அண்மையில் நடந்தேறிய சம்பவமாகும். அதேபோல, கடந்த நத்தார் தினத்தன்று புத்தளம் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தின் உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மதமும், மனிதர்களை நல்வழிப்படுத்துவதையே போதிக்கின்றன. அதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். எமது நாட்டு, அரசியலமைப்பிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், கோவில் உண்டியல்களை உடைத்து, களவெடுத்து செல்லுதல் மட்டுமன்றி, விலைமதிக்க முடியாத விக்கிரகங்களைத் திருடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இது, மிகவும் அபாயகரமான சமிக்ஞையாகும். ஆகையால், விக்கிரகத் திருட்டு தொடர்பில், தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து, அதன் பின்புலத்தைக் கண்டறிய வேண்டியது துறைக்குப் பொறுப்பானவர்களின் கடமையாகும்.

யாழ். மாவட்டத்திலுள்ள இந்து கோவில்களிலேயே விக்கிரகங்களை திருடிச்செல்லும் சம்பவங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ளன. ஆகையால்தான், விக்கிரகங்கள் திருடப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள இந்து கோவில்களில் திருடப்பட்ட விக்கிரகங்கள், கொழும்பில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டு, அதில் பல விக்கிரகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதுதொடர்பிலான விசாரணைகள் இன்னுமின்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

மதச் சின்னங்களைத் திருடுதல், சேதப்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக, அந்த மதத்தைப் பின்பற்றுவோரின் மனங்களில் கீறல் ஏற்படும். இவ்வாறான, ஈனத்தனமான செயலை மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தால், அதுவே, மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு வித்திட்டுவிடும்.

ஆகையால், பல்லினங்கள்,மதங்கள், கலாசாரங்களைக் கொண்டவர்கள் வாழும் இப்பூமியில், இனங்களுக்கு இடையில் குரோதங்கள் ஏற்படாதவகையில் வாழவேண்டுமாயின், அடுத்தவர் பின்பற்றும் மதங்களை எவ்வகையிலேனும் நிந்திக்கக்கூடாது என்பதே எமது தாழ்மையான கருத்தாகும். (29.12.2021)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X