2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாதாள உலகக் கோஷ்டியினர் தண்டிக்கப்படவேண்டும்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவ்வாறான சம்பவங்களில் சிலர் பலியாகி விடுகின்றனர். பலர் காயமடைந்து விடுகின்றனர்.

துப்பாக்கி இயங்காமையால் ஒரு சிலர் தப்பித்துக் கொள்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஒரு சில மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டு விடுகின்றனர். இவற்றுக்கு இடையில், பரஸ்பரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு தரப்பினர் காயமடைந்தும், குற்றஞ்சாட்டப்பட்டவர் மரணித்தும் விடுகின்றனர்.

அந்த கதை அத்தோடு நின்று விடும். எனினும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை நடத்தும் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. 

இந்தோனேசியாவில், இலங்கை பொலிஸாரால் நடத்தப்பட்ட மிகவும் தனித்துவமான பெரிய அளவிலான நடவடிக்கையில்   பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தோனேசியாவிலிருந்து பாதாள உலகக் கும்பல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​“ பாதாள உலகக் கும்பல் ஒரு வெட்கமற்ற குழு என்றும், அத்தகைய பொறிகளை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும்” புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விமான நிலைய வளாகத்தில் இருந்து கேட்டுக் கொண்டார்.

பாதாள உலக உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் எத்தனை எத்தனை குடும்பங்கள் சீரழிகின்றன. போதைக்கு அடிமையானவர்கள், போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணம் கிடைக்காவிடில், கடத்தல்,களவு, கொள்ளை, கொல்லைச் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். 

இதனால், பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அஞ்சி, அஞ்சியே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே கப்பம் பெறலும் அதிகரித்துள்ளது. வெளியில் சொல்லிவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படுமென அஞ்சும் சிலர் பிரதேசத்தை விட்டே குடும்பத்துடன் கிளம்பிவிடுகின்றனர். 

சிறந்த மற்றும் நியாயமான உலகில், ஊழல்வாதிகள், மோசடி செய்பவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு இடமில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 

எனினும், கடந்த காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது குறைவாக இருந்தது.  அரசியல் சாக்குப்போக்குகளால் மறைக்கப்பட்ட பாதாள உலகத்தையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பையும் ஒடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பாராட்டவேண்டும்.

கைது செய்யப்படுவார்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னர் அந்த வலையமைப்பை முழுமையாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கோஷ்டியினரால் சேகரிக்கப்பட்டிருக்கும் சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவேண்டும். அதுமட்டுமன்றி, பாதாள உலகக் கோஷ்டி தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் சகாக்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அவர்களையும் கைது செய்து சட்டத்தின்  முன்னிறுத்தி, ​கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X