Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 19 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யை அர்த்தபுஷ்டியுடன் புகட்ட வேண்டும்
கடந்த 12 வருடங்களாக, மே மாதம் 18ஆம் திகதி, ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்’ ஈகைச் சுடரேற்றி நினைவுகூரப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் வந்துபோகும் நத்தார், புதுவருடம், தைப்பொங்கல், சித்திரைப்புத்தாண்டு, தீபாவளி, ஊர்க் கோவில் திருவிழா போன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் கடமையாகவோ, சடங்காகவோ, முகத்தைக் காட்டும் நிகழ்வாகவோ கருதிவிடக் கூடாது.
மஞ்சள், சிகப்பு வர்ணங்களுக்கு மத்தியில், சுடரேற்றி, அவற்றை ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் மட்டும் மொழிக்கானதும் இனத்துக்கானதும் மண்ணுக்கானதுமான கடமை முற்றுப்பெற்று விடுகின்றது என எவரும் திருப்தி அடைந்துவிட முடியாது. அதற்கும் அப்பால் ‘வேரோட’ வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் ஈகைச்சுடர் ஏற்றல் என்பது, அழித்தாலும் அழியமாட்டோம்; வீழ்த்தினாலும் விழமாட்டோம்; மாற்று வடிவத்தில் மாற்றுச் சக்தியாக எழுச்சி பெறுவோம் என்பதை அடையாளப்படுத்தி நிற்கவேண்டும். ஏனெனில், முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதப்பேரவலம், தமிழினத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ, முடிவோ அல்ல; நீண்ட காலமாக, தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்படும் இனஅழிப்பின் ஓர் அங்கம் மட்டுமேயாகும்.
வடக்கு, கிழக்கு தேசங்களை சிங்கள-பௌத்த மயமாக்கி, தமிழ் பேசும் மக்களின் தனித்துவ சிந்தனைகள், செழுமையான வாழ்க்கை முறைகள், பண்பாட்டுச் சிதறல்கள், வரலாற்றுக் கோலங்கள், தாயக இருப்பு போன்றவற்றைக் கேள்விக் குறியாக்கும் கைங்கரியத்தில் அரசாங்கம் இன்று முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது.
தமிழர்களுக்கு விமோசனத்தை வழங்குவதற்குத் ‘தேவதூதர்’கள் எவரும் வரப்போவதில்லை. எந்தநாடும் தமது நலன்களை விட்டுவிட்டு, தமிழர்களுக்காக வரமாட்டார்கள் என்ற உண்மை முள்ளிவாய்க்காலில் புரியவைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று, ஒரு தசாப்தத்தின் பின்னணியில், இன்னொரு தலைமுறை வளர்ந்து வருகின்றது. இவ்வாறு வளர்ந்துவருகின்ற தலைமுறையினர், கற்றுக்கொள்கின்ற வரலாறு, வெற்றியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்டதாக எழுதப்படுகின்றது. இது மிகுந்த ஆபத்தானது. வெற்றியாளர்களால் கட்டமைக்கப்படும் வரலாற்றைக் கேள்விக்கு உட்படுத்தி, அடுத்த சந்ததிக்கு, தமிழர்களுக்கான உண்மையான வரலாற்றைக் கடத்துவதன் மூலமே, நீதிக்கானதும் உரிமைக்கானதுமான கோரிக்கைகளை உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எந்தக் காலத்திலும் வரலாறே வழிகாட்டியாக உள்ளதால், துயரங்களையும் வடுக்களையும் நினைவுகளையும் வரலாறுகளையும் தமிழினம் அடுத்த சந்ததிகளுக்கு தனது இலக்கை அடையும் வரைக்கும் கடத்தவேண்டும்.
இறுதிப்போரின் நாள்களில், உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. கிடைக்கும் சொற்ப அரிசியையும் நீரையும் உப்பையும் சேர்த்து, கஞ்சி வழங்கும் நடைமுறை முள்ளிவாய்க்காலில் பின்பற்றப்பட்டது. அதை வரிசையில் நின்று, வாங்கிப் பருகி தமிழ் மக்கள் பசிபோக்கினர். கஞ்சிக்காக வரிசையில் நின்றபோது, எறிகணைகள் வீழ்ந்து வெடித்து, பலர் இறந்தனர். அந்தக் கஞ்சியை மறக்கக்கூடாது என்பதற்காகவே, ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பருகும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.
நாம் ஏன் ஈகைச்சுடர் ஏற்றினோம், உப்பில்லாக் கஞ்சி ஏன் குடித்தோம் போன்ற வரலாறுகள், இன்றைய, அடுத்த சந்ததியினருக்கு தொய்வில்லாமல் அர்த்தபுஷ்டியுடன் புகட்டப்பட வேண்டும். (19.05.2021)
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025