2024 மே 21, செவ்வாய்க்கிழமை

ரூபாயின் மதிப்பு வேண்டுமென்றே குறைக்கப்படுகின்றதா?

Mayu   / 2024 மார்ச் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது.

இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது.

இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் ​போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும்.

அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம்.

எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார்.

குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை.

அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும்.

அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும்.

தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .