2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை

Freelancer   / 2025 ஜனவரி 20 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று (20) அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3ஆம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டது. 

இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, இராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார்.

இந்நிலையில், காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கரீஸ்மா யோசித்தார். ஷரோன் ராஜை இரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். 

இதன்போது சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை  குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை.

கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி, ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கரீஸ்மா கொடுத்தார். 

ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் குடித்தார். தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். 

இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.

இந்நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X