2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

Editorial   / 2025 ஜனவரி 16 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (14) நடந்தது.இதில், மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் (23) என்பவர் மாடுபிடி வீரராக களம் இறங்கினார். போட்டியில் காளை முட்டியதில் அவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (15) இறந்தார்.

அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு புதன்கிழமை (15) உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். ஜல்லிக்கட்டில் உயிரிழந்த நவீன்குமாருக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு புதன்கிழமை (15)  நிறைவுபெற்ற நிலையில் வியாழக்கிழமை (16) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நெருக்கடியையும், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

அதனால், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொலிஸார் வீரரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X