Freelancer / 2025 ஜனவரி 30 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பெண்களுக்கு தனிக்குளியல் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுந்துள்ளது. புனித நாட்களின் ராஜகுளியலுக்கு தனிநேரம் ஒதுக்க கோரி பெண் துறவிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2013இல் பெண் துறவிகளுக்காக பரி அகாடா அமைக்கப்பட்டது. மூத்த பெண் துறவி திரிகால் பாவ்தா இதனை ஏற்படுத்தினார். இதன் பிறகுதான் 2015 உஜ்ஜைனி கும்பமேளாவில் திருநங்கைகளுக்காக கின்னர் அகாடா தொடங்கப்பட்டது. பரி அகாடாவுக்கு கடந்த காலங்களில் நாசிக், உஜ்ஜைனி, ஹரித்துவார் கும்பமேளாக்களில் மாநில அரசுகளின் ஆதரவு கிடைத்தது. எனினும் இவர்களுக்கு புனித நாட்களில் ராஜகுளியலுக்கு தனி நேரம் ஒதுக்கப்படவில்லை.
இச்சூழலில் உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிலும் இவர்கள் தங்களுக்கு தனி நேரம் கேட்டிருந்தனர். இந்நிலையில் இங்கும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது குறித்து பரி அகாடாவின் நிறுவனர் திரிகால் பாவ்தா கூறும்போது, "எங்கள் அகாடாவில் வெளிநாட்டினர் உட்பட சுமார் ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் புனித நாட்களின் ராஜகுளியலை தனியாக நடத்த விரும்புகின்றனர். எங்கள் கோரிக்கைக்கான கதவுகள் அனைத்தும் மூடப்பட்டதால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்றார்.
பரி அகாடாவின் இந்த வழக்கு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய அகாடாக்கள் சபை தலைவர் ரவீந்திர கிரி கூறும்போது, "பெண் துறவிகள் அனைவரும் அனைத்து அகாடாக்களிலும் மதிக்கப்படுகின்றனர். இவர்களில் பலருக்கும் பல அகாடாக்களில் மகா மண்டலேஷ்வர் பதவி அளித்து கவுரவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய அகாடாக்கள் இனி தேவையில்லாத நிலை உள்ளது" என்றார்.
நாட்டில் மொத்தம் உள்ள 13 அகாடாக்களும் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளன. இவற்றில் சைவர்கள் 7, வைராகிகள் மற்றும் உதாசிகள் தலா 3 அகாடாக்கள் உள்ளன. இவர்களுக்கு அரசு மற்றும் பொதுமக்கள் இடையே அனைத்து காலங்களிலும் பல சலுகைகள் கிடைக்கின்றன. இந்த 13 அகாடாக்களின் தலைமை சபையாக அகில இந்திய அகாடா பரிஷத் 1954இல் நிறுவப்பட்டது. கும்பமேளாக்களில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் ஐதீக முறையில் மாற்றம் கோரி பரி அகாடா சார்பில் முதல்முறையாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
29 minute ago
42 minute ago
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago
51 minute ago
58 minute ago