2021 ஜூன் 16, புதன்கிழமை

கடிகாரக் கைது: 15 மில். டொலர் நட்டஈடு கோருகிறான் அஹமட்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடிகாரமொன்றைப் பாடசாலைக்கு எடுத்துச் சென்றமைக்காக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்த 14 வயது மாணவனான அஹமட் மொஹமட், தனது கைது தொடர்பாக 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நட்டஈடாகவும் மன்னிப்பையும் கோரியுள்ளான்.

டெக்ஸாஸின் ஈர்விங் நகர அதிகாரிகளிடமிருந்தும் பாடசாலை அதிகாரிகளிடமிருந்துமே, இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

இந்த செப்டெம்பரில், கடிகாரமொன்றைப் பாடசாலைக்கு எடுத்துச் சென்ற அவன், அக்கடிகாரத்தின் அலாரம் ஒலியெழுப்ப, ஆசிரியரொருவரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தான்.

அதைத் தொடர்ந்து, உலகளாவிய ஆதரவைப் பெற்ற அவன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டதோடு, முழுமையான புலமைப்பரிசிலுடன், கட்டாரில் கல்விகற்க அழைக்கப்பட்டான். அந்த அழைப்பையும், அவனது குடும்பம் ஏற்றுக் கொண்டு, அங்கு குடிபெயர்ந்துள்ளது.

இந்நிலையிலேயே தற்போது, கைது செய்யப்பட்டமையால் அவனது நற்பெயருக்கு, பூகோள ரீதியில் களங்கம்‌ ஏற்பட்டுள்ளதாகவும், அவனது சிவில் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவனது வழக்கறிஞர்கள், 15 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈட்டையும் மன்னிப்பையும் கோரியுள்ளனர்.

60 நாட்களுக்குள் நட்டஈடும் மன்னிப்பும் கிடைக்காதவிடத்து, சிவில் உரிமைகள் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக, நட்டஈட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிழையை அவன் மீது திருப்ப அதிகாரிகள் முயல்வதாகவும், இந்தக் கைதின் காரணமாக அவனுக்கு நல்லது நடந்துள்ளதாகத் தெரிவிக்க முயல்கின்றனரெனவும் தெரிவித்துள்ள அவனது வழக்கறிஞர், அவனதும் அவனது குடும்பத்தினரினதும் தாங்குதிறன் காரணமாக, இந்த நிலையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததாகத் தெரிவித்தார்.
கடிதங்கள் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்திய நகர, பாடசாலை அதிகாரிகள், அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்கதாக, அந்தக் கடிகாரத்தை அச்சிறுவன் வீட்டில் தயாரித்ததாக அவனும் அவனது குடும்பத்தினரும் தெரிவித்திருந்த நிலையில், உண்மையில் அது, கடையில் வாங்கப்பட்ட கடிகாரத்தின் உள்ளடக்கத்தை, பெட்டியொன்றில் வைத்தே, பாடசாலைக்குக் கொண்டு சென்றதாக நிரூபிக்கப்பட்டதோடு, ஆசிரியர்களின் எச்சரிக்கையை மீறி, அதில் அலாரத்தை ஏற்படுத்தி, குண்டு இருப்பது போன்ற குழப்ப நிலையை அவன் வேண்டுமென்றே ஏற்படுத்தினான் எனவும், அவனது விமர்சகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .