2026 ஜனவரி 28, புதன்கிழமை

அமெரிக்க படைகள் தாக்குதல்; அல் கொய்தா தலைவர் கொலை

Freelancer   / 2026 ஜனவரி 19 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ். பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் மூத்த தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்காவின் இராணுவ அமைப்பான சென்ட்காம்  வெளியிட்ட அறிக்கையில்,

அமெரிக்கப் படைகள் ஜனவரி 16 அன்று இந்தத் தாக்குதலை நடத்தியது. இதில், பிலால் ஹசன் அல்-ஜாசிம் என்ற அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். இவர், டிசம்பரில் அமெரிக்க வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தார்.

அல்-ஜாசிம் அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாதியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார். மேலும், அந்த பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் பங்கு வகித்தார். மூன்று அமெரிக்கர்களின் மரணத்துடன் தொடர்புடையவரின் மரணம், எங்கள் படைகளைத் தாக்கும் பயங்கரவாதிகளைத் துரத்திச் செல்வதில் எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் எங்கள் போர்வீரர்கள் மீது தாக்குதல்களை நடத்துபவர்கள், திட்டமிடுபவர்கள் அல்லது தூண்டுபவர்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம் என்று சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் கூறினார்.

சிரியாவின் பால்மைராவில் டிசம்பர் 13 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு அமெரிக்கப் படைவீரர்களும், ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர். மேலும் சில அமெரிக்க மற்றும் சிரியப் பணியாளர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சென்ட்காம் 'ஹாக்ஐ ஸ்ட்ரைக்' என்ற பெயரிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் சிரியா முழுவதும் பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் கீழ், அமெரிக்கப் படைகள் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதத் தளங்களை இலக்காகக் கொண்டு, 200-க்கும் மேற்பட்ட துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.

கடந்த ஓராண்டில், அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகள் சிரியா முழுவதும் 300 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளன. மேலும் 20 இற்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X