2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இதுவரை கிட்டத்தட்ட 2,000 சடலங்கள் மீட்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவில், பூமியதிர்ச்சியும் சுனாமியும் தாக்கிய சுலவேசி தீவிலிருந்து, இதுவரை கிட்டத்தட்ட 2,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்தோடு, மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, உள்ளூர் இராணுவப் பேச்சாளர் எம். தோஹிர், சுலவேசி தீவிலிருந்து இதுவரை 1,944 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சடலங்களைத் தேடும் பணிகளை நிறுத்துமாறு, இதுவரையில் எமக்குப் பணிப்புரை கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

செப்டெம்பர் 28ஆம் திகதி, இப்பகுதியில் தாக்கிய இரட்டை அனர்த்தம் காரணமாக, 5,000 பேர் வரையில் காணாமற்போயுள்ளனர் என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். எனவே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை, மேலும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கி, உயிருடன் இருப்போரை மீட்பதற்கான முயற்சிகளே ஆரம்பத்தில் காணப்பட்ட நிலையில், தற்போது அனர்த்தம் இடம்பெற்ற 2 வாரங்களாகின்ற நிலையில், உயிருடன் எவரும் காணப்படுவர் என்ற நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. எனவே, தற்போதைய மீட்பு நடவடிக்கை, சடலங்களை மீட்கும் நடவடிக்கையாகவே மாறியுள்ளது.

இதேவேளை, சுலவேசி தீவில், மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான பாலு நகரத்தில், தரைமட்டமாகியுள்ள பகுதிகளை, பாரிய புதைகுழிகளாகப் பிரகடனம் செய்து, அப்படியே விடுவதற்கான முடிவை, அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X