2025 நவம்பர் 05, புதன்கிழமை

இரண்டாவது ஈரானிய ட்ரோனுக்கெதிராக ‘தற்காப்பு நடவடிக்கை எடுத்தோம்’

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொர்மூஸ் நீரிணையில், இரண்டாவது ஈரானிய ட்ரோனுக்கெதிராக ஐக்கிய அமெரிக்க கடற்படைக் கப்பலொன்று தற்காப்பு நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய அமெரிக்க இராணுவம் நேற்று  தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கடற்படைக் கப்பலை ட்ரோன் மிரட்டியதையடித்து ஹொர்முஸ் நீரிணையில் ஈரானிய ட்ரோனொன்றை கடற்படைக் கப்பலொன்று அழித்ததாக ஐக்கிய அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை தெரிவித்த நிலையில், ட்ரொனொன்றை இழந்ததாக எந்தவிதத் தகவலையும் தாங்கள் கொண்டிருக்கவில்லை என ஈரான் கூறியிருந்தது.

இந்நிலையிலேயே, சர்வதேச நீர்ப்பரப்பில் ஈரானிய ட்ரோன்கள் இரண்டின் ஆக்ரோஷமான செயல்களையடுத்து யு.எஸ்.எஸ் பொக்ஸர் கப்பலால் தற்காப்பு நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க மத்திய கட்டளையின் பேச்சாளர் ஏர்ள் ப்றோண், ஒரு ட்ரோன் நீருக்குள் வீழ்வதை அவதானித்தாகவும், மற்றையது வீழ்வதை அவதானிக்கவில்லை எனவும் கூறியதுடன், ஹொர்முஸ் நீரிணையுடனான பயணித்தின்போதான இரண்டு வெவ்வேறான சம்பவங்கள் இவை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இரண்டாவது ட்ரோனொன்று வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ஐக்கிய அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் கென்னித் மக்கென்ஸி, நேர்காணலொன்றில் சி.பி.எஸ் நியூஸில் கூறியிருந்தார்.

இந்நிலையில், எந்தவொரு ஈரானிய ட்ரோனும் வீழ்த்தப்படவில்லை என ஈரானிய பாதுகாப்பமைச்சர் அமிர் ஹடாமி இன்று (24) தெரிவித்ததாக ஐ.எஸ்.என்.ஏ செய்தி முகவரகம் கூறியுள்ளது.

அரேபிய வளைகுடாவில் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையொன்றால் ஐக்கிய அமெரிக்க இராணுவக் கண்காணிப்பு ட்ரோனொன்றை கடந்த மாதம் ஈரான் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. தமது வான்பரப்பில் ட்ரோன் இருந்ததாக ஈரான் தெரிவித்த நிலையில், அது சர்வதேச வான்பரப்பில் இருந்ததாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அந்நேரத்தில், ஐக்கிய அமெரிக்க ட்ரோனை வீழ்த்தியமைக்கு பதிலடியாக ஈரான் மீது இராணுவத் தாக்குதலொன்றை ஆரம்பிப்பதை ஐக்கிய அமெரிக்கா நெருங்கியிருந்ததாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X