Editorial / 2019 மே 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களவைத் தேர்தலில், பிரமாண்ட வெற்றிபெற்று, சர்வதேசத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்து, தன்னிகரற்ற தலைவராக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில், காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார் என்றால், அது நரேந்திர மோடி மட்டும்தான் என்ற நிலையில், இந்தியாவின் 15ஆவது பிரதராக, இரண்டாவது முறையாக, இன்று (30) பதவியேற்கிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில், இன்று (30) இரவு 7 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார்.
யார் இந்த மோடி?
குஜராத் மாநிலத்தின் வாட்நகரில், 1950ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி, தாமோதர்தாஸ் முல்சந்த் மோடியின் மகனாக பிறந்தவர் தான், நரேந்திர தாமோதர்தாஸ் மோடி எனப்படும் பிரதமர் மோடி.
சிறு வயதிலேயே, புத்தர், விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு வடமாநிலங்களுக்குச் சென்ற மோடி, அங்கு சில மாதங்கள் சாதுக்களுடன் தங்கியிருந்துவிட்டு, வீடு திரும்பினார். வாட் நகர் ரயில் நிலையத்தில் இருந்த தனது தந்தையின் தேநீர் கடையிலும் அகமதாபாத் பஸ் நிலையத்தில் இருந்த தனது சகோதரர்களின் தேநீர் கடையிலும் அவர் பணியாற்றினார்.
சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இணைந்து செயல்பட்ட மோடி, பின்னர் அந்த இயக்கத்தின் முழுநேர ஊழியராக உருவெடுத்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பை, தனது பகுதியில் அவர் உருவாக்கினார்.
பின்னர் 1987ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்த மோடி, அதே ஆண்டில் அகமதாபாத் நகர பா.ஜ.க செயலாளராகவும் பின்னர் குஜராத் மாநிலச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஆற்றிய கட்சிப்பணியால், 1995ஆம் ஆண்டு பா.ஜ.கவின் தேசிய செயலாளரானார்.
அதே ஆண்டில் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்தியாவில் பா.ஜ.க தலைமையில் அமைந்த முதல் ஆட்சி இதுவே. இந்த ஆட்சி உருவானதில், மோடி முக்கிய பங்காற்றினார். இதனிடையே டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பையும் பின்னர் குஜராத் பல்கலைக்கழக்த்தில் அதே பாடப்பிரிவில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போது, அப்போதைய முதலமைச்சர் கேசுபாய் படேல் பதவி விலக நேரிட, 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் நரேந்திர மோடி. அன்று முதல் 2014ஆம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வென்று பிரதமராகும் வரை, தொடர்ந்து 4 முறை குஜராத் முதலமைச்சராக பதவி வகித்தார்.
தீர்மானங்களும் சாதனைகளும்
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி இரவு, திடீரென்று, “நாளை முதல் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது“ என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணம், ஊழல், கள்ள ரூபாய் நோட்டு, பயங்கரவாதத்துக்குப் பணம் கொடுத்தல் உள்ளிட்டவற்றைக் குறைப்பதற்கே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
5 மில்லியன் கழிவறைகள், 58 மில்லியன் சிலிண்டர்கள் விநியோகம், ஏழை மக்களுக்கு 300 மில்லியன் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டது, 26.3 மில்லியன் வீடுகள், ஏழை மக்களுக்கு கட்டித் தரப்பட்டது, ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்புறுதி செய்யப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆதார் திட்டத்தை எதிர்த்த பா.ஜ.க, அதை அரசாங்கத் திட்டங்களுக்குக் கட்டாயப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியது. இன்று, பல அரசாங்கத்திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கு வீடு திட்டம் என்ற பிரதமரின் திட்டத்தின் கீழ், பல குடிசை வீடுகள், சீமெந்துவீடுகளாக மாறியுள்ளன. மேலும், பிரதமர் நரேந்திர மோடியில், டிஜிட்டல் இந்தியாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார்.
விருதுகளும் மரியாதைகளும்
2006 - “இந்தியா டுடே” நாளிதழ், இந்தியாவின் “சிறந்த முதலமைச்சர்” என்ற விருதை வழங்கியது.
குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக “கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா” என்ற அமைப்பு, “இ-ரத்னா” விருதைய வழங்கியது.
2009 - ஆசியாவின் சிறந்த “எப்.டி.ஐ பெர்சனாலிட்டி” விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
2012 - “டைம்” பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் “சிறந்த அரசியல்வாதிகளில்” ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.
நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்துக்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
பதவியேற்பு விழா
இந்தியாவின் 15ஆவது பிரதமராக, பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள விழாவில், நேபாளம், மொரிஷியஸ், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கவுள்ளனர். தாய்லாந்திலிருந்து சிறப்பு பிரதிநிதி, கிரிசடா பூன்ராஜ் இந்த நிகழ்வில் பங்கேற்பார். பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மியான்மர் ஜனாதிபதி யுவின்மையின்ட், கிர்கிஸ்தான் ஜனாதிபதி சுரோன்பே ஜீன்பெக்கோவ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து
இந்தப் பதவியேற்பு விழாவுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரதான கூட்டணிக் கட்சி என்ற முறையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவியேற்பில் பங்கேற்கின்றனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பாக டி.ஆர்.பாலுவும், ஆ. ராசா பங்கேற்கவுள்ளனர். இவை தவிர தற்போது எம்.பிக்களாக தேர்வாகியுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம், நாளை (31) இடம்பெறவுள்ளது. ஜுன் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், ஜுன் மாதம் 7ஆம் திகதி, இந்தியாவின் 15ஆவது பிரதமர் நரேந்திர மோடி, மாலைத்தீவுக்கு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையிலிருந்து
ககககககக
உண்மையை மறைக்கும் பாகிஸ்தான் ஊடகம்
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. துாதரகத் தோல்வியாக ஒப்புக் கொள்ள மறுக்கும் பாகிஸ்தான் ஊடகங்கள், வெளியுறவுத்துறை, “இந்தியாவின் உள்நாட்டு அரசியல் அளிக்கும் நெருக்கடிகள் தான், பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பித்த சமையல்
மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு வரக்கூடிய வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய உணவுப் பழக்கம், ஆடம்பரமானதாக இருக்காது. அதே போன்று குவியல் குவியலாக அதிகப்படியான உணவு பதார்த்தங்களையும் அவர்கள் சேர்த்துக் கொள்வது கிடையாது என்பதை குடியரசுத் தலைவர் மாளிகை சமையல் கலைஞர்கள் மனதில் கொண்டுள்ளனர்.
இருப்பினும் விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பதற்காக 'டால் ரைசினா' என்ற உணவு பதார்த்தம் விசேடமாக சமைக்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 48 மணி நேரம் தேவைப்படும். எனவே செவ்வாய்க்கிழமை இரவு முதலே சமையல் வேலை தொடங்கிவிட்டது. சைவ உணவுகள் மட்டுமின்றி அசைவ உணவுகளும் தயார்படுத்தப்படுகின்றன.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago