2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

Shanmugan Murugavel   / 2024 மே 19 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ஜனாதிபதி எப்ராஹிம் றைசி பயணித்த ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்துக்கருகே இன்று (19) இச்சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அயல்நாடான அஸர்பைஜானில் அந்நாட்டு ஜனாதிபதி இல்ஹாம் அலியெவ்வுடன் இணைந்து அணையொன்றை  ஜனாதிபதி றைசி சனிக்கிழமை (18) திறந்து வைத்திருந்தார்.

தொடரணியில் மூன்று ஹெலிகொப்டர்கள் இருந்ததாக ஈரானிய அரசுடன் தொடர்புபட்ட ஊடகம் தெரிவித்துள்ள நிலையில், றைசி பயணிக்காத மற்றைய இரண்டும் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன.

றைசியுடன் வெளிநாட்டமைச்சர் ஹொஸைன் அமிர்-அப்டொல்லஹியன், ஈரானின் அதியுயர் தலைவரின் கிழக்கு அஸர்பைஜானுக்கான பிரதிநிதி அயோத்துல்லாஹ் மொஹமட் அலி அலெ-ஹஷெமும் அதே ஹெலிகொப்டரில் பயணித்ததாக நம்பப்படுகிறது.

மற்றைய ஹெலிகொப்டர்களில் இருந்த சக்தி அமைச்சர் அலி அக்பர் மெஹ்ரபியன், வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் மெஹ்ரடட் பஸர்பஷ் ஆகியோர் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர்.

றைசியின் ஹெலிகொப்டரிலிருந்தோர் அவசர அழைப்பை மேற்கொண்டதாக தஸ்னிம் செய்தி முகவரகம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X