நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், விஜய் மீது அதிரடியான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தற்போது தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்வுகளில் சங்கீதா பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், அண்மையில் அவர் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவில், "விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அதனால் தனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்" சங்கீதா குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விவாதங்கள் பூதாகரமான நிலையில், விஜய் ரசிகர்கள் இணையங்களில் தன்னை ஆபாசமாக விமர்சிப்பதாக சங்கீதா தரப்பு வேதனை தெரிவித்தது. இதனை அனைத்திந்திய மாதர் சங்கமும் வன்மையாகக் கண்டித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழாவிற்கு, நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. சொந்தக் கட்சித் தொண்டர்களே இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், சங்கீதா தரப்பில் தற்போது புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"விஜய்யுடன் 26 ஆண்டுகள் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்துள்ளேன். அவர் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது. ஆனால், இப்போது அந்த இல்லத்திற்குள் நுழைய விஜய் எனக்கு அனுமதி மறுக்கிறார்."
மேலும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
• தங்குவதற்கு இடமில்லை: "பிரிட்டன் குடியுரிமை கொண்டு லண்டனில் வசிப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்போது சென்னையில் தங்குவதற்கு எனக்கு வேறு வீடு இல்லை."
• நீதிமன்ற உத்தரவு: விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்கத் தனக்கு அனுமதி வழங்கி, விஜய்க்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
• ஜீவனாம்சம்: "திரைப்படங்களில் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் விஜய், எனக்கும் குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும். பரஸ்பரம் பிரிந்து செல்ல அவர் ஒத்துழைக்க மறுக்கிறார்."