2026 மே 09, சனிக்கிழமை

dd

உக்ரைனிய காவலிலிருந்து கசாக் இனத்தவர் விடுவிப்பு

Freelancer   / 2022 மார்ச் 10 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனில் பல மாதங்களாக குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் வடமேற்கு மாகாணமான சின்ஜியாங்கைச் சேர்ந்த கசாக் இனத்தவர், தான் விடுவிக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மேற்கத்தேய நாட்டுக்குச் செல்வதாகவும் சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

எர்சின் எர்கினுலி என்ற சீனப் பிரஜை, ரஷ்ய ஆயுதப் படைகள் உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்ததால் தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான அகதிகளுடன் தானும் போலந்துப் பகுதியில் இருப்பதாக தெரிவித்தார்.

வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு கட்டடங்களில் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ள போலந்து, அவர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பிற தேவைகளை வழங்குகிறது என்று எர்சின் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபரில் சரியான ஆவணங்கள் இல்லாமல் போலந்துக்குள் செல்ல முயன்றபோது உக்ரேனிய எல்லை பிரிவினரால் எர்கினுலி கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்துவதற்கான கீழ் நீதிமன்றத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, அந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் மேற்கு நகரமான லிவிவ் குடியேற்ற மையத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
 
எர்கினுலி தனது சீன கடவுச்சீட்டை தொலைத்துவிட்டதாகவும், தன்னை சீனாவுக்கு திருப்பி அனுப்பினால் சிறை தண்டனை மற்றும் சித்திரவதையை சந்திக்க நேரிடும் என்றும் கூறியதையடுத்து, உக்ரைனிய அதிகாரிகள் இறுதியில் அவருக்கு அகதி அந்தஸ்தை வழங்கினர்.

சமீபத்திய ஆண்டுகளில், பல உய்குர், கசாக் மற்றும் சின்ஜியாங்கின் பிற பெரும்பான்மையான முஸ்லிம் பழங்குடி இனக் குழுக்களின் உறுப்பினர்கள் தடுப்புக்காவலுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த இனக்குழுக்களை சேர்ந்த 2 மில்லியன் பேர் சீன தடுப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .