2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

எச்1பி விசா கட்டண உயர்வு கெடுபிடி: சீனா ‘கே’ விசா

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேர்வதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தின் முன்னாள் மூத்தஅதிகாரி எஸ்தர் கிராபோர்டு கூறியதாவது: ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார். ஆட்சி நிர்வாகம் மாறிய காலத்தில் எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு சவால்கள் எழுந்தன. அப்போது இந்திய பொறியாளர்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டனர். நேரம் காலம் பார்க்காமல் கூடுதலாக உழைத்தனர். எக்ஸ் தளத்தை தொடர்ந்து இயங்கச் செய்தனர். அவர்களோடு சீன பொறியாளர்களும் கடினமாக உழைத்தனர். இந்திய, சீன பொறியாளர்களால்தான் எக்ஸ் வலைதளம் காப்பாற்றப்பட்டது.

அமெரிக்கர்கள் மத்தியில் வெளிநாட்டு பணியாளர்கள் மீது கடும் அதிருப்தி காணப்படுகிறது. இது நாட்டின் நலனுக்கு எதிரானது. சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களால்தான் அமெரிக்காவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். இவ்வாறு எஸ்தர் கிராபோர்டு தெரிவித்துள்ளார். இதேபோல ஏராளமான அமெரிக்க நிபுணர்கள், தொழிலதிபர்கள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் தகவல் தொழில்நுட்ப தலைமையகமாக கருதப்படுகிறது. இங்கு செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர். மேலும் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர்.

நாசா, ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐபிஎம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அமெரிக்க அரசின் எச்1பி விசா கட்டண உயர்வால் இந்திய பொறியாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை தங்கள் நாடுகளுக்கு ஈர்க்க தீவிர முயற்சி செய்து வருகின்றன. இது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி வீழ்ந்தது. அப்போது, ஜெர்மனியில் இருந்து மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தனர். தற்போது எச்1பி விசா கெடுபிடியால் உயர் திறன்சார் பணியாளர்களை அமெரிக்கா இழக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

வைரலாகும் எலான் மஸ்க் கருத்து:எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அவரது முந்தைய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதில் மஸ்க் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் போன்ற முன்னணி நிறுவனங்களை உருவாக்கி உள்ளேன். ஆனால், எச்1பி விசா மூலமாகவே நான் அமெரிக்காவில் நுழைந்தேன். இந்த விவகாரத்தில் என்னோடு யார் விவாதம் செய்ய முயன்றாலும் அவர்களை எதிர்க்க தயாராக உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின்கேவிசா அறிமுகம்: அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி அளிக்க வேண்டும். பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சூழலில், தற்போது எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது.

சீனா சார்பில் 12 வகையான விசாக்கள் நடைமுறையில் உள்ளன. வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஆர் விசா, இசட் விசா வழங்கப்படுகிறது. இதில் ஆர் விசாவில் 180 நாட்களும், இசட் விசாவில் ஓராண்டும் சீனாவில் தங்கியிருந்து பணியாற்ற முடியும்.இந்த சூழலில், புதிதாக கே விசாவை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிமுகம்செய்ய உள்ளோம். இதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விசாவைப் பெற சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை. அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். நீண்டகாலம் சீனாவில் தங்கி பணியாற்றலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கே விசாவை எளிதாக பெறலாம். கல்வி பயிற்றுவித்தல், ஆராய்ச்சித் துறையில் இருக்கும் இளம் வல்லுநர்களும் கே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். 2035-ல் உலகின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப தலைமையகமாக சீனாவை மாற்றஅதிபர் ஜி ஜின்பிங் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக இளம் ஆராய்ச்சியாளர், மிக சிறந்த ஆராய்ச்சியாளர் என்ற 2 திட்டங்களை சீன அரசு செயல்படுத்த உள்ளது. இவ்வாறு சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .