2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை விருந்தே ரோபோ சங்கரின் உயிரை பறித்தது

Editorial   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஏற்கனவே அதிகமாக மது குடித்ததால் மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர் இப்போது மரணத்தை தழுவியிருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் நடிகரும், சங்கரின் நெருங்கிய நண்பருமான காதல் சுகுமார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். அதிக அளவு அவர் மதுவை தொடர்ந்து குடித்ததால் நோய் வந்து நண்பர்கள், மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியோடு அதிலிருந்து மீண்டார். அப்படி மீண்ட அவர் அறவே குடியை நிறுத்தி தனது கரியரில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினார். மேலும் மது ஏற்படுத்தும் தீங்கு குறித்து தொடர்ந்து பேசிவந்த அவர்; அதுதொடர்பான விளம்பரங்களிலும் நடித்தார்.

 அவரது உடல்நிலை திடீரென சில நாட்களுக்கு முன்பு குன்றியது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்; பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியாவது அவரை உயிர் பிழைக்க வைத்துவிட வேண்டும் என்பதில் மருத்துவர்களுக்கு போராடினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சங்கரின் இந்த உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு பெருத்த இடியாகத்தான் இந்த மரணம் அமைந்திருக்கிறது. திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி; குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்தார்கள்.

சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடி அஞ்சலி செலுத்தி சங்கரை வழியனுப்பி வைத்தார். இதனை பார்த்த ஒருதரப்பினர் வழக்கம்போல் அவரை விமர்சிக்க தொடங்கினார்கள். ஆனால் மரண வீட்டில் நடனமாடுவது ஒன்று பெரிய குற்றம் இல்லை; இதற்கு முன்னரும் பல மரண நிகழ்வுகளில் இது நடந்திருக்கும் சூழலில்; பிரியங்காவை ஏன் தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டும் என்று சப்போர்ட் செய்து; விமர்சிப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான காதல் சுகுமார் வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "சங்கர் திறமை வாய்ந்த கலைஞன். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பிறகு மீண்டு வந்தார். பிரியங்காவிடம் சங்கரின் பழக்கவழக்கங்கள் குறித்து கேட்டால்; எவ்வளவுதான் சொல்வது என்று சோர்வுடன் கேட்பார். சங்கர் அதிலிருந்து வெளியே வர வேண்டுமென்று பிரியங்கா பேசாமல் இருந்து பார்த்தார், சாப்பிடாமல் இருந்து பார்த்தார்.

சங்கருக்கு இலங்கை எப்போதுமே சொந்த ஊர் போல்தான். நிகழ்ச்சிகளும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அடிக்கடி செல்வார். சமீபத்தில்கூட அவர் அங்கு சென்றிருந்தார். அப்போது விருந்து ஒன்று நடந்ததாகவும், மீண்டும் சில பழக்கங்களை சங்கர் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள். மதுவுக்கு அடிமையாகி சந்திரபாபு, என்.எஸ்.கே, கலாபவன் மணி, ரோபோ சங்கர் என பலர் 50 வயதை கடக்காமலேயே சென்றுவிட்டார்கள்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X